ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனை

ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனை

Update: 2023-07-29 18:45 GMT

நாகையில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

விண்ணை தொடும் விலையேற்றம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை விண்ணைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. சமையலுக்கு அத்தியாவசிய தேவையான தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து செல்வது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அந்த வகையில் நாகைக்கு கும்பகோணம் மார்க்கெட்டில் இருந்து தக்காளி மொத்தமாக விற்பனைக்கு வருகிறது.

நாகையில் உள்ள கடைகளில் தக்காளியின் விலை கடந்த ஒரு மாத காலமாக ரூ.100-ல் இருந்து ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. பெரும்பாலான கடைகளில் குறைந்த அளவே தக்காளி விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கிலோ கணக்கில் வாங்கி வீட்டில் இருப்பு வைத்திருக்கும் இல்லத்தரசிகள் தற்போது கால், அரை என்று குறைந்த அளவிலேயே தக்காளியை வாங்கி சென்றனர்.

இதனால் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தவும், இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் பண்ணை பசுமை கடைகள் மூலமாகவும், ரேஷன் கடைகள் மூலமாகவும் சென்னையில் தக்காளி விற்பனையை மாநில அரசு தொடங்கியது.வெளிமார்க்கெட்டில் ரூ.100, ரூ.120 வரை விற்கப்பட்டாலும் ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டது.

ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை

ஆனாலும் மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்தபாடில்லை. நாகையில் கிலோ ரூ.120-க்கு விற்ற தக்காளி நேற்று முதல் ரூ.30 அதிகரித்து ரூ.150-க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

புதிதாக பயிரிடப்பட்டுள்ள தக்காளி விளைந்து அது அறுவடைக்கு பின்னரே தக்காளி விலை குறையும். அதுவரை வரும் காலங்களில் தக்காளி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்