ஒரு கிலோ தக்காளி ரூ.120 ஆக குறைந்தது

நாகர்கோவில் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 ஆக குறைந்தது.

Update: 2023-08-05 20:20 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவில் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 ஆக குறைந்தது.

தக்காளி

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. ஆப்பிள் விலையையே மிஞ்சும் அளவுக்கு ஒரு கிலோ தக்காளி ரூ.200-க்கு விற்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்தனர். தினமும் ஒன்று அல்லது இரண்டு தக்காளியை மட்டுமே வாங்கி சமையல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே தக்காளி விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை வைத்திருந்தனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தின் பயன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேரவில்லை. பெரும்பாலான மக்கள் மார்க்கெட்டுகளிலேயே தக்காளி வாங்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

விலை குறைந்தது

இந்தநிலையில் தக்காளி விலை சற்று குறைந்திருந்தது. நாகர்கோவிலில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.180-க்கும், சில்லறை விலையில் ரூ.200-க்கும் விற்கப்பட்டு வந்த தக்காளி நேற்று ரூ.120 ஆக குறைந்தது. நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்கப்பட்டது. அதே சமயம் சாதாரண கடைகளில் ரூ.130-க்கும், கிராமப்புறங்களில் ரூ.140-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தக்காளி விலை குறைவு பற்றி வியாபாரி சந்தோஷ் கூறுகையில், "கனகமூலம் சந்தைக்கு தக்காளி வரத்து முன்பை விட சற்று அதிகரித்து இருக்கிறது. இதனால் விலை குறைந்துள்ளது. வரும் நாட்களில் இதே போல வரத்து இருந்தால் தக்காளி விலை இன்னும் குறையும்" என்றார்.

கனகமூலம் சந்தையில் காய்கறிகளின் நேற்றைய விலை (ஒரு கிலோ) நிலவரம் வருமாறு:-

விலை நிலவரம்

கத்தரி-ரூ.60, பீன்ஸ்-ரூ.140, உருளைகிழங்கு-ரூ.40, மிளகாய்-ரூ.100, சின்ன வெங்காயம்-ரூ.80, பெரிய வெங்காயம்-ரூ.30, இஞ்சி-ரூ.320, பூசணி-ரூ.50, சவ்சவ்-ரூ.40, கேரட்-ரூ.80, பீட்ரூட்-ரூ.40, முருங்கை-ரூ.50, புடலை-ரூ.40, சுரக்காய்-ரூ.50, மல்லி இலை-ரூ.80, வெண்டை-ரூ.60, பூண்டு-ரூ.220 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்