ஒரு கிலோ தக்காளி ரூ.150-ஐ எட்டியது
ராமநாதபுரத்தில் புதிய உச்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.150-ஐ எட்டியது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் புதிய உச்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.150-ஐ எட்டியது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.
தக்காளி விலை உச்சம்
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே வருகின்றது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 1 கிலோ தக்காளியின் விலை அதன் 3 மடங்கை காட்டிலும் விலை உயர்ந்துவிட்டது.
ராமநாதபுரம் பகுதியிலும் கடந்த 2 நாட்களாக தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே இருக்கின்றது. குறிப்பாக 1 கிலோ தக்காளி கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று 1 கிலோ தக்காளியின் விலை ரூ.150 என விலை உயர்ந்தது.
கிலோ ரூ.150-க்கு விற்பனை
ராமநாதபுரம் அரண்மனை பகுதிகளில் உள்ள காய்கறி கடைகள், சந்தை, பாரதிநகர் உள்ளிட்ட நகரின் அனைத்து இடங்களிலும் உள்ள கடைகளிலும் நேற்று தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளியின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் தக்காளி வியாபாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்.
1 கிலோ தக்காளி ரூ.150 என விலை உயர்ந்துள்ளதால் பெரும்பாலானோர் தக்காளியை வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக வீடுகளில் தற்போது தக்காளியை சமையலுக்கு பயன்படுத்துவதை பெண்கள் தவிர்த்து வருகின்றனர். தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
விலையை குறைக்க வேண்டும்
இது குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த குடும்பத் தலைவி லட்சுமி கூறியதாவது:-
கடந்த 10 நாட்களுக்கு மேலாக தக்காளியின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து விலை உயர்ந்தே வருகின்றது. ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி தற்போது கிலோ ரூ.150 என புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆனால் இதுவரை தக்காளியின் விலையை கட்டுப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். எனவே இது குறித்து அரசு கூடுதல் கவனம் செலுத்தி தக்காளியின் விலையை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி உள்ளிட்ட மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனையானது.