போதையில் விபத்தில் சிக்கிய ஓட்டல் தொழிலாளி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்

Update: 2023-06-18 16:43 GMT

செய்யாறு

குடிபோதையில் சென்று விபத்தில் சிக்கிய தொழிலாளியின் மோட்டார்சைக்கிளை போலீசார் வாங்கி வைத்துக்கொண்டதால் ஆத்திரம் அடைந்த அவர் செல்போன் டவரில் ஏறி கீழே குதிக்கப்போவதாக மிரட்டிய சம்பவம் செய்யாறில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓட்டல் தொழிலாளி

தண்டராம்பட்டை அடுத்த தானியப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் ராஜசேகர் (வயது 30). இவர் செய்யாறு பகுதியில் உள்ள துரித உணவகத்தில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் செய்யாறில் இருந்து ஆரணி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தீயணைப்பு நிலையம் அருகே சென்றபோது மோட்டார்சைக்கிளிலிருந்து தவறி கீழே விழுந்தார்.

அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ராஜசேகரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் குடிபோதையில் இருப்பதை அறிந்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்க முயன்ற போது சரிவர ஒத்துழைப்பு தராமல் சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் தகராறு செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சிகிச்சை அளிக்க முடியாததால் செய்யாறு போலீசாருக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் மருத்துவமனைக்கு சென்றனர். தொடர்ந்து தலையில் காயம் அடைந்த ராஜசேகருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து போலீசார் ராஜசேகரை செய்யாறு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். குடிபோதையில் மோட்டார்சைக்கிளை ராஜசேகர் ஓட்டி வந்தபோது விபத்தில் சிக்கியதால் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்துவிட்டு நாளை வருமாறு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த ராஜசேகர் ஆரணி கூட்ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆத்திரத்தில் இருந்த அவர் அங்கிருந்த செல்போன் டவரை பார்த்தவுடன் டவர் இருக்கும் கட்டிடத்தில் உள்ள கடையில் தீப்பெட்டி ஒன்றினைக் கேட்டுள்ளார்.

கடை உரிமையாளர் எதற்கு எனக் கேட்டபோது, டவரில் உள்ள ஒயர் அறுந்துள்ளதாகவும் அதனை பழுது பார்க்க தீப்பெட்டி தேவைப்படுகிறது என கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து படிக்கட்டு வழியாக கட்டிடத்தின் மேல் உள்ள செல்போன் டவர் மீது விறுவிறு என ஏறி டவரின் உச்சியினை ராஜசேகர் அடைந்தார்.

குதிக்கப்போவதாக மிரட்டல்

தொடர்ந்து டவரின் உச்சியில் இருந்த ராஜசேகர் அங்கிருந்து குதித்து விடுவேன் என தற்கொலை மிரட்டல் விடுக்க ஆரம்பித்தார். அங்கிருந்தோர் தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக செய்யாறு சரக துணை சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் ராஜசேகரை இறங்கி வரும்படி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை ஏற்க மறுத்த அவர் என்னை பிடிக்க முயன்றால் டவர் உச்சியில் இருந்து குதித்து விடுவேன் என தொடர்ந்து மிரட்டல் விடுத்தார். பிரதான சாலையில் இந்நிகழ்வு நடந்ததால் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு தனது செல்போனில் படம் பிடித்தபடியே சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கயிறுகட்டி இறக்கினர்

போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோது தீயணைப்புத் துறையினர் செல்போன் டவரின் ஏணி வழியாக ஏறினர்.

அதே நேரத்தில் செய்யாறு போலீஸ்காரர் வேலவன், துணிச்சலுடன் மறுபுறத்தில் உள்ள இரும்பு கம்பியினை ஏணியாக பயன்படுத்தி மெதுவாக டவர் மீது ஏறினார். அவர் ராஜசேகர் பின்புறமாக சென்று லாவமாக அவரை பிடித்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து முன்புறமாக ஏறிய தீயணைப்புத் துறையினர் ராஜசேகரை பிடித்து கயிறு கட்டினர்.

பின்னர் அவரை செல்போன் டவரில் இருந்து மெதுவாக இறக்கி வந்தனர். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு இறக்கி வந்த ராஜசேகரை செய்யாறு போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இ்ந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்