10 ரூபாய் நாணயங்களை வாங்கும் ஓட்டல் உரிமையாளர்

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக 10 ரூபாய் நாணயங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து ஓட்டல் உரிமையாளர் வாங்கி வருகிறார்.

Update: 2022-10-18 16:44 GMT

திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் வர்த்தக நிறுவனங்கள், மளிகை கடைகள், ஓட்டல்கள், சந்தைகள், மார்க்கெட்டுகள், டீக்கடைகள், பெட்டி கடைகள் மற்றும் பஸ்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை. இதுதொடர்பாக, கடந்த 13-ந்தேதி 'தினத்தந்தி'யில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் 10 ரூபாய் 'காயின்' வாங்கப்படும் என்று அறிவிப்பு செய்து துண்டு பிரசுரம் ஒட்டி உள்ளனர். அதன்படி ஓட்டலுக்கு வருகிற வாடிக்கையாளர்களிடம் 10 ரூபாய் நாணயங்களை வாங்கி கொள்கின்றனர்.

இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் ரமேஷ் கூறும்போது, எங்களது ஓட்டலுக்கு வங்கி மேலாளர்கள் சிலர் உணவு சாப்பிட வந்தனர். அவர்களிடம், 10 ரூபாய் நாணயங்கள் குறித்து 'தினத்தந்தி'யில் வெளியான செய்தி குறித்து கேட்டேன். அதற்கு அவர்கள், தாராளமாக 10 ரூபாய் நாணயங்களை வாங்கலாம் என்றனர். அதன்பிறகு தான், ஓட்டலில் 10 ரூபாய் நாணயத்தை வாங்கி வருகிறோம். இதேபோல் பாக்கி தொகை கொடுக்கும்போது 10 ரூபாய் நாணயத்தை கொடுக்கிறோம். அப்போது வாங்கி கொள்ளும் வாடிக்கையாளர்கள், மீண்டும் 10 ரூபாய் நாணயத்தை எங்களது ஓட்டலுக்கு வந்து திருப்பி கொடுக்கின்றனர் என்றார். இதேபோல் பிற வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அனைத்து பஸ் கண்டக்டர்களும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்