தன் வீட்டு வாசலில் தானே பாட்டில் குண்டு வீசிய இந்து முன்னணி பிரமுகர்

தன் வீட்டு வாசலில் தானே பாட்டில் குண்டு வீசிய இந்து முன்னணி பிரமுகர்

Update: 2022-11-21 19:37 GMT

கும்பகோணத்தில், சுய விளம்பரத்திற்காக தன் வீட்டு வாசலில் தானே பாட்டில் குண்டு வீசிய இந்து முன்னணி பிரமுகர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்து முன்னணி பிரமுகர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி மேலக்காவேரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி(வயது 40). இவர், இந்து முன்னணி கும்பகோணம் மாநகர செயலாளராக இருந்து வருகிறார்.

இவருக்கு மாலதி(35) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் மதுரையில் பிளஸ்-1 படித்து வருகிறார். இளைய மகன் கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

வீட்டில் பாட்டில் குண்டு வீசியதாக புகார்

நேற்று காலை சக்கரபாணி கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு போன் செய்துள்ளார். மறுமுனையில் பேசிய போலீசாரிடம், தான் வழக்கம்போல் தூங்கி எழுந்து வீட்டின் கதவை திறந்து வெளியில் வந்து பார்த்தபோது வீட்டு வாசல் முழுவதும் மண்எண்ணெய் வாசனையுடன் கண்ணாடி துகள்கள் சிதறி கிடந்ததாகவும், மர்ம நபர்கள், பாட்டிலில் மண்எண்ணெய்யை நிரப்பி அதில் திரியை வைத்து கொளுத்தி தனது வீட்டின் வாசலில் வீசி சென்று இருப்பதாகவும் கூறினார். இந்த தகவலின் பேரில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சாமிநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து வந்தனர். பின்னர் சக்கரபாணி வீட்டின் முன்பு பாட்டில் வீசப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு தஞ்சை மாவட்ட தடயவியல் துறை உதவி இயக்குனர் ராமச்சந்திரன் வந்து ஆய்வு செய்தார். மேலும் போலீஸ் மோப்ப நாய் 'டெபி' அங்கு வரவழைக்கப்பட்டது. பாட்டில் குண்டு வீசப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரம் சென்ற மோப்ப நாய் பின்னர் மீண்டும் அதே இடத்திற்கு வந்து படுத்துக்கொண்டது.

என்னை அச்சுறுத்தும் வகையில்...

இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா, சக்கரபாணியிடம் விசாரணை நடத்தினார். அப்போது சக்கரபாணி, நான் இந்து முன்னணி அமைப்பில் பல ஆண்டுகளாக நிர்வாகியாக இருந்து வருகிறேன். இதனால் சிலர் என் மீது அதிருப்தியில் இருந்து வந்தனர்.

தற்போது என்னை அச்சுறுத்தும் வகையில் இந்த பாட்டில் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். அப்போதுதான் என்னைப்போன்ற இந்து அமைப்பு நிர்வாகிகளின் உயிருக்கு உத்தரவாதம் ஏற்படும் என்றார்.

சுயவிளம்பரத்திற்காக...

இந்த சம்பவம் தொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் புகார் தெரிவித்த சக்கரபாணி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து சக்கரபாணி மற்றும் அவரது மனைவி மாலதி ஆகிய இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

கணவன்-மனைவி இருவரிடமும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சுயவிளம்பரத்திற்காக சக்கரபாணி தன் வீட்டு வாசலில் தானே பாட்டில் குண்டை வீசி விட்டு யாரோ மர்ம நபர்கள் வீசியதாக கூறியது தெரிய வந்தது.

கைது

இதனையடுத்து போலீசார் நேற்று மாலை சக்கரபாணியை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட சக்கரபாணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.சுய விளம்பரத்திற்காக தன் வீட்டு வாசலில் தானே மண்எண்ணெய் நிரப்பிய பாட்டிலை வீசி விட்டு மர்ம நபர்கள் வீசியதாக புகார் செய்த இந்து முன்னணி பிரமுகர் கைதான சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்