செவித்திறன் குறைபாடு உள்ள மாணவன் முதல் பெஞ்சில் உட்கார அனுமதி

செவித்திறன் குறைபாடு உள்ள மாணவன் முதல் பெஞ்சில் உட்கார அனுமதி

Update: 2022-07-22 15:04 GMT

ுதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கையால் பள்ளியில் இருந்து வெளியேற்ற முயன்ற செவித்திறன் குறைபாடு உள்ள மாணவனை முதல் பெஞ்சில் உட்கார வைத்து பாடம் கற்பிக்கப்பட்டது. இதனால் மாணவனின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

செவித்திறன் குறைபாடு

திருவாரூர் வடக்கு வீதியை சேர்ந்தவர் குஞ்சப்பா. இவர் டீக்கடையில் மாஸ்டராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி தமயந்தி.

இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் பவின் (வயது 10) திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இவனுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளதால் காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

கதறி அழுதார்

பவின் படிக்கும் பள்ளியில் அவரை சக மாணவர்களுடன் உட்கார வைக்காமல் தனியாக உட்கார வைப்பதாகவும், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான பள்ளியில் அவனை சேர்க்கும்படியும், மேலும் அதே பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் அவனது தங்கை தர்ஷிகாவிற்கும் சேர்த்து மாற்று சான்றிதழ் வாங்கி வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் நிர்பந்திக்கின்றனர் என கூறி தமயந்தி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கதறி அழுதார்.

விசாரணை

இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மாணவன் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் உத்தரவின்படி மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று தலைமை அசிரியர் காந்திமதியிடம் விசாரணை நடத்தினார். அப்போது இந்த பிரச்சினை குறித்து தலைைம ஆசிரியரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டது.

பெற்றோர் மகிழ்ச்சி

அதனை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாணவன் பவின் அந்த பள்ளியிலேயே எட்டாம் வகுப்பு வரை படிக்க வேண்டும் எனவும், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பவினிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் எனவும், தனி கவனம் செலுத்தி மாணவனுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

அதன்படி மாணவன் பவினை பள்ளி வகுப்பறையில் முதல் பெஞ்சில் உட்கார வைத்து பாடம் கற்பிக்கப்பட்டது. இதனால் பவினின் பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்