கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இடத்தில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு
கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இடத்தில் மூதாட்டியிடம் மர்ம நபர்கள் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.;
திருவள்ளூர்,
புதுச்சேரி மாநிலம் ரெட்டியார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கலாவதி (வயது 61). இவர் தனது மகள் மற்றும் தங்களது கிராமத்தில் உள்ள சிலருடன் பாண்டிச்சேரியில் இருந்து பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நேற்று முன்தினம் காலை வந்தார்.
பின்னர் அங்கிருந்து திருவள்ளூர் அடுத்த புட்லூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு அன்று காலை 11 மணிக்கு வந்தனர். அப்பொழுது கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து மக்கள் கூட்டத்திற்குள் சென்று கோவிலுக்கு உள்ளே சென்று சாமி கும்பிட முடியாது என்று நினைத்த கலாவதி கோவிலின் வெளியே உள்ள சூலத்தின் அருகில் சென்று கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தார். அந்த நேரத்தில் அவர் கலுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து கலாவதி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.