குழந்தை திருமணத்தால் கர்ப்பம் அடைந்த சிறுமி விஷம் குடித்தார்
குழந்தை திருமணத்தால் கர்ப்பம் அடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
திருமங்கலம்
குழந்தை திருமணத்தால் கர்ப்பம் அடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
தற்கொலை முயற்சி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கும், கேரள மாநிலம் வண்டிபெரியார் பகுதியை சேர்ந்த உறவினரான 27 வயது வாலிபருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு மாணவி கணவருடன் கேரளாவில் குடியேறியுள்ளார்.
4 மாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்படவே தற்போது மாணவி கணவரிடம் கோபித்து கொண்டு சொந்த ஊரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.
இந்த நிலையில் மனவிரக்தி அடைந்த அந்த மாணவி விஷம் குடித்து மயங்கினார். உடனே அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
5 பேர் மீது வழக்கு
மேலும் மைனர் பெண் என்பதால் இது குறித்து கள்ளிக்குடி சமூகநலத்துறை அலுவலர் ரூபி அருள்மணிக்கு தகவல் கொடுத்தனர். அவர் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் அவருக்கு 17 வயதே ஆகிறது என்பதால் திருமங்கலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரது கணவர், மாமியார், மாமனார் என 5 பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.