விவசாயிகள், கல்குவாரி உரிமையாளர்கள் கூட்டம்

கிணத்துக்கடவில் விவசாயிகள், கல்குவாரி உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-11-22 19:00 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தாசில்தார் அலுவலகத்தில் குதிரையாலாம்பாளையம், நெம்பர்.10 முத்தூர் ஊராட்சி பகுதியில் உள்ள விவசாயிகள், கல்குவாரி உரிமையாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் மல்லிகா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, குடியிருப்பு பகுதியில் கல்குவாரியில் உள்ளதால் குவாரிகளில் வைக்கப்படும் வெடி அதிக சத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் விவசாய நிலத்தில் பாறைகள் விழுவதால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. மேலும் இரவு நேரங்களில் குடியிருப்பு வழியாக லாரிகளில் கற்களை ஏற்றி செல்கின்றனர். குவாரிகளில் பெரிய பெரிய கற்களை உடைப்பதால் அதிக சத்தம் கேட்கிறது. இதனால் தொடர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறினர்.

அதனைத் தொடர்ந்து பேசிய கல் குவாரி உரிமையாளர்கள் பேசினர். அப்போது, கனிமவளத்துறையினர் சொல்லும் விதி முறைப்படி கற்களை உடைக்கிறோம். அரசு விதிகளின்படிதான் வெடி வெடிக்கப்பட்டு வருகிறது என்றார்.

பின்னர் கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா பேசுகையில், கல்குவாரிகளில் இருந்து விவசாய நிலங்களில் கல் விழுந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. குவாரிகளில் இருந்து கல் வெளியே வந்து விழக்கூடாது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு குவாரியில் இயங்க வேண்டும். இரு தரப்பு கருத்துக்களையும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் கிணத்துக்கடவு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, தலைமையிடத்து துணை தாசில்தார் முத்து, கிணத்துக்கடவு மண்டல துணை தாசில்தார் ராமராஜ், வருவாய் ஆய்வாளர்கள் லலிதா, ஜமுனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்