தோட்டத்து கிணறு திடீரென உள்வாங்கி சரிந்ததால் பரபரப்பு

வத்திராயிருப்பு அருகே தோட்டத்து கிணறு திடீரென உள்வாங்கி சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2022-12-30 18:36 GMT

வத்திராயிருப்பு

வத்திராயிருப்பு அருகே தோட்டத்து கிணறு திடீரென உள்வாங்கி சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிணறு உள்வாங்கியது

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சேதுநாராயணபுரம் கிராமம் உள்ளது. அங்கு வத்திராயிருப்பை சேர்ந்த முருகவனம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் உள்ள கிணறு நேற்று மதியம் திடீரென உள்வாங்கியது. இதனால் கிணற்றில் இருந்த தண்ணீர் சிறிது சிறிதாக தானாகவே குறைய தொடங்கியது. அதன் அருகில் அமைக்கப்பட்டிருந்த மோட்டார் பம்பு செட் அறையும் சிறிது சிறிதாக சரிந்தது. அங்கு காவலுக்கு இருந்த காவலாளி முத்தையா மற்றும் சிலர் சுதாகரித்துக் கொண்டு அங்கிருந்த பொருட்களை உடனடியாக அகற்றி வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். தோட்டத்து அறையில் இருந்த பொருட்களை கொண்டு சென்று வைத்த சிறிது நேரத்திலேயே அறை முழுவதும் பலத்த சத்தத்துடன் மண்ணுக்குள் இறங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூக்குரல் எழுப்பினர். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகளும் உதவிக்கு ஓடி வந்தனர். ஆனால் சிறிதுசிறிதாக மண் சரிந்து கொண்டே இருந்தது.

பரபரப்பு

இதையடுத்து வேறு யாரும் அப்பகுதிக்கு செல்ல முடியாதபடி தடுப்பு வேலி அமைத்தனர். அந்த தடுப்பு வேலியும் சிறிது நேரத்தில் கிணற்றுக்குள் உள்வாங்கி சரிந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்த மின்கம்பமும் சிறிது சிறிதாக சரிந்து மின் வயர்கள் தொங்கின. இதுகுறித்து விவசாயிகள் மின்வாரியத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்புகளை துண்டித்தனர். இதனால் அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று சம்பவத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்