குன்னூர் அருகே வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீ-2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்

குன்னூர் அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எாிந்தது. 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

Update: 2023-02-13 19:00 GMT

ஊட்டி

குன்னூர் அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எாிந்தது. 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

வனப்பகுதியில் தீ

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பகல் நேரங்களில் கடும் வெயில் மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. பனி காலம் என்பதால் அனைத்து இடங்களிலும் புற்கள் மற்றும் செடி கொடிகள் காய்ந்து கருகி காணப்படுகிறது.

இதனால் அவ்வபோது காட்டு தீ ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள கேத்தி பகுதியில் தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள வனப்பகுதிக்குள் திடீரென காட்டு தீ ஏற்பட்டது. தீ மளமளவென பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.

ஒரு ஏக்கர் பரப்பளவில்

இதுபற்றி உடனடியாக குன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணபை்பு அலுவலர் மோகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது. எனினும் இந்த தீ விபத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் மரங்கள், செடி, கொடிகள் எரிந்த கருகின. வெயில் காலம் தொடங்கி உள்ளதால் வனப்பகுதிக்குள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தி உள்ளார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்