பழனி அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை

பழனி அருகே, கொட்டித்தீர்த்த கனமழையால் சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

Update: 2022-09-03 12:59 GMT

குடகனாற்றில் தண்ணீர்

கடந்த சில தினங்களாக திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழை பெய்து வருகிறது.இதன் எதிரொலியாக, ஆத்தூர் காமராஜர் அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து அதிகளவு தண்ணீர் வேடசந்தூர் வழியாக அழகாபுரி குடகனாறு அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் திண்டுக்கல்லில் இருந்து தாடிக்கொம்பு, விட்டல்நாயக்கன்பட்டி, கோட்டையூர், காக்காத்தோப்பு பிரிவு, நாகம்பட்டி பிரிவு ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகள், நூற்பாலைகளில் இருந்து ரசாயன கழிவுநீர் குடகனாற்றில் திறந்து விடப்பட்டது

அதிகாரிகள் ஆய்வு

கழிவுநீர் கலப்பதால், ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரில் வெள்ளை நுரை பொங்குகிறது. மேலும் பச்சை நிறத்தில் செல்லும் அந்த தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி தலைமையிலான விவசாயிகள் லட்சுமணம்பட்டி தடுப்பணையை பார்வையிட்டனர்.

இது தொடர்பாக, திண்டுக்கல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உதவி பொறியாளர் திவ்யா தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து குடகனாற்றில் செல்லும் தண்ணீரை ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.இதற்கிடையே குடகனாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளப்பெருக்கு

இதேபோல் நெய்க்காரப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி உடையார் குளம் நிரம்பி வெளியேறிய தண்ணீரால் ராசாபுரம், தாமரைக்குளம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ராசாபுரம் பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்ததால் பொதுமக்கள் சென்று வர வசதியாக தற்காலிகமாக சாலை அமைக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பரித்து சென்ற தண்ணீரில் அந்த சாலை அடித்து செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மேலும் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்குள் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ராசாபுரம், தாமரைக்குளம் கரிகாரன் புதூர் உள்ளிட்ட 5 கிராம மக்கள் தங்களது கிராமங்களை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாய்ந்து விழுந்த மரம்

பழனி வரதமாநதி பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் கொடைக்கானல் சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் பழனியில் இருந்து தேக்கந்தோட்டம், சவரிக்காடு பகுதிக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதைத்தொடர்ந்து போக்குவரத்து தொடங்கியது.

இதேபோல் சவரிக்காடு அருகே மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 80-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகள் ஓரிரு நாட்களில் நடைபெறும் என்றும், அதன்பிறகு போக்குவரத்து தொடங்கும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்