தோட்டத்தில் தீ விபத்து; ஆயிரக்கணக்கான வாழைகள் நாசம்

ஆத்தூர் அருகே தோட்டத்தில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் எரிந்து நாசமாயின.

Update: 2023-07-23 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆத்தூர் அருகே தோட்டத்தில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் எரிந்து நாசமாயின.

தோட்டத்தில் திடீர் தீ

ஆத்தூர் அருகே மேலாத்தூர் கிராமத்தில் ரேஷன் கடைக்கு பின்புறம் தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு நேற்று காலை 10 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. கோடை காலம் என்பதால் காய்ந்த சருகுகள் மளமளவென எரிந்து தீ நாலாபுறமும் பரவியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தங்கள் வீட்டின் மோட்டாரை இயக்கி தீயை அணைக்க போராடினர்.

ஆனாலும் தீ கட்டுக்குள் அடங்காததால் சாகுபுரம் டி.சி.டபிள்யு நிறுவனம் மற்றும் திருச்செந்தூர் அரசு தீயணைப்பு வாகனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்களும் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆயிரக்கணக்கான வாழைகள் நாசம்

சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ நீண்ட நேரம் எரிந்ததால் மேலாத்தூரில் இருந்து குச்சிக்காடு வரை புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் ஆயிரக்கணக்கான வாழைகள் எரிந்து நாசமாயின. தீப் பிடித்தது எப்படி? என ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட இடங்களை மேலாத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார் பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்