திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வந்த பெண் பக்தர் சாவு
திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வந்த பெண் மூச்சி திணறல் ஏற்பட்டு இறந்தார்.
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று சுயநினைவின்றி கிடந்தார். மலைக்கோவில் மேல் இருந்த டாக்டர் பரிசோதனை செய்ததில் அவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுக்குறித்து தகவலறிந்து மலைக்கோவிலுக்கு விரைந்து சென்ற திருத்தணி போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார், இறந்தவர் குறித்து விசாரித்தபோது, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுக்கா, மாறன் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரி (வயது 45) என தெரிந்தது. இவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஆஸ்துமா பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் மலை கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, மலைமேல் உள்ள ஆர்.சி. மண்டபத்தில் இரவு தங்கியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இது குறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதைபோல திருத்தணி பழைய தர்மராஜாகோவில் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே 70 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் கடந்த மாதம் 14-ந் தேதி திடீரென மயங்கி விழுந்தார். அவ்வழியாக சென்றவர்கள் முதியவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். இறந்த முதியவரின் பெயர், விலாசம் தெரிய வில்லை. இது குறித்து திருத்தணி கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.