காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தலைஞாயிறு ஒன்றியத்தில் 24 ஊராட்சிகள் உள்ளன. தலைஞாயிறில் உழவர் சந்தை மற்றும் ஒருங்கிணைந்த சந்தைகள் அமைக்கப்படவில்லை. தலைஞாயிறில் பஸ்கள் வந்து செல்லும் இடத்திலேயே மீன் மற்றும் இறைச்சி கடைகள் உள்ளன. மீன் மற்றும் இறைச்சி வாங்க வருபவர்கள் இடநெருக்கடியால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். தலைஞாயிறில் காய்கறி மார்க்கெட் கிடையாது. இதனால் நாலுவேதபதி, வெள்ளப்பள்ளம், வேட்டைக்காரனிருப்பு, தோப்புத்துறை, புஷ்பவனம் போன்ற ஊர்களில் விளையும் காய்கறிகள், உழவர்களால் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பரவை உழவர் சந்தைக்கும், 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருத்துறைப்பூண்டிக்கும் எடுத்து செல்லப்படுகிறது. எனவே தலைஞாயிறில் உழவர் சந்தை மற்றும் ஒருங்கிணைந்த சந்தைகள் அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.