மனைவி, மாமியாரை காரை ஏற்றி கொன்று விடுவதாக மிரட்டிய பிரபல ரவுடி கைது

குமராட்சி அருகே மனைவி, மாமியாரை காரை ஏற்றி கொன்று விடுவதாக மிரட்டிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-11 19:28 GMT

காட்டுமன்னார்கோவில், 

குமராட்சி அருகே உள்ள தெம்மூர் கிராமத்தை சேர்ந்தவர் காய்கறி என்கிற ஜெயசங்கர்(வயது 47). பிரபல ரவுடியான இவர், பாரதிபிரியா(37) என்பவரை கடந்த 15 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கனவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது பற்றி அறிந்ததும் பாரதிபிரியாவின் தாய் இந்திரா(55) என்பவர், தனது மகளை பார்க்க தெம்மூர் கிராமத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். மேலும் குடும்ப பிரச்சினை குறித்து ஜெயசங்கரிடம் இந்திரா தட்டி கேட்டார்.

கொலை மிரட்டல்

இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயசங்கர், தனது மனைவி பாரதிபிரியாவையும், மாமியார் இந்திராவையும் ஆபாசமாக திட்டி, காலால் தாக்கினார். எனவே இந்திரா, தனது மகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டார். உடனே ஜெயசங்கர், தனது காரில் பின்தொடர்ந்து சென்று இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இது குறித்து பாரதிபிரியா கொடுத்த புகாரின் பேரில் குமராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயசங்கரை கைது செய்தனர். மேலும் அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. ஜெயசங்கர் மீது குமராட்சி போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகளும், பல போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடலூர் மாவட்ட ரவுடிகள் பட்டியலில் ஜெயசங்கரும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்