பிரபல ஓட்டல் அதிபர் கிணற்றில் குதித்து தற்கொலை

மூலைக்கரைப்பட்டி அருகே பிரபல ஓட்டல் அதிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-11-16 19:57 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே பிரபல ஓட்டல் அதிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓட்டல் அதிபர்

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கூந்தன்குளம் பார்வதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜநாராயணன் (வயது 55). இவர் நெல்லை சந்திப்பில் பிரபலமான செம்மீன் ஓட்டல் மற்றும் வணிக வளாகம், லாட்ஜ் நடத்தி வந்தார்.

இவருக்கு மனைவி, ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகனுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. தற்போது ராஜநாராயணன் தனது குடும்பத்துடன் நெல்லையில் வசித்து வந்தார்.

கிணற்றில் குதித்தார்

நேற்று மதியம் தனது காரில் ராஜநாராயணன் சொந்த ஊரான கூந்தன்குளத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நெல்லைக்கு புறப்பட்டு வந்தார்.

மூலைக்கரைப்பட்டி அருகே வந்தபோது காரின் டயர் பஞ்சரானது. இதனால் அவர் காரில் இருந்து கீேழ இறங்கி அங்கும், இங்கும் அலைந்து கொண்டு இருந்தார். அப்போது, திடீரென்று ராஜநாராயணன் அங்கிருந்த கிணற்றில் குதித்தார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார்.

உடல் மீட்பு

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர் நாங்குநேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கிணற்றில் இறங்கி ராஜநாராயணன் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

ராஜநாராயணன் தற்கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. அவர் சாவுக்கான காரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மூலைக்கரைப்பட்டி அருகே கிணற்றில் குதித்து பிரபல ஓட்டல் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்