இரு கிராமத்தினர் இடையே கோஷ்டி மோதல்; 7 பேர் படுகாயம்

ஓட்டப்பிடாரம் அருகே இரு கிராமத்தினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-04-06 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே இரு கிராமத்தினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

2 கிராமத்தினர் மோதல்

ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கீழக்கோட்டை பஞ்சாயத்தில் கே.கைலாசபுரம், கீழக்கோட்டை, கோபாலபுரம், கோவிந்தாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்களும், கே.கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்களும் கீழக்கோட்டை கிராமத்தில் கபடி விளையாடினர்.

அப்போது இரு கிராமத்தை சேர்ந்த வாலிபர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். பின்னர் கிராம பெரியவர்கள் தலையிட்டு மோதலை தடுத்துள்ளனர். இதை தொடர்ந்து இரு கிராமங்களின் வாலிபர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

7 பேர் படுகாயம்

இந்நிலையில் நேற்று கே.கைலாசபுரம் சந்திமாரிச்சம்மன் கோவில் அருகே கே.கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும், கீழக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இரு கிராமத்தினர் இடையே கோஷ்டி மோதலாக மாறியது. இதில் கே.கைலாசபுரத்தை சேர்ந்த கீர்த்திவாசன் (வயது 18), கார்த்திக், பிரித், அஜய், சிவபாரத் மற்றும் கீழக்கோட்டையைச் சேர்ந்த சண்முகவேல், துரைராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த 7 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பதற்றம்-போலீஸ் பாதுகாப்பு

இச்சம்பவம் குறித்து நாரைக்கிணறு போலீசார் இருகிராமங்களை சேர்ந்த சண்முகவேல், துரைராஜ், கீர்த்தி வாசன், அஜய் பிரித், கார்த்திக் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரெண்டு லோகேஸ்வரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்