பள்ளி கட்டிட 'சிலாப்'பில் 2 நாட்களாக உணவு, தண்ணீரின்றி பரிதவித்த நாய்
பள்ளி கட்டிட ‘சிலாப்'பில் 2 நாட்களாக உணவு, தண்ணீரின்றி பரிதவித்த நாய்
தக்கலை:
தக்கலை அருகே காட்டாத்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சனி, ஞாயிறு விடுமுறையான 2 நாட்களுக்கு பிறகு நேற்று மாணவ, மாணவிகள் வந்தனர். அப்போது 3-வது மாடியின் கட்டிடத்தை ஒட்டியுள்ள சிலாப்பில் நாய் ஒன்று சோர்வாக படுத்து கிடந்தது.
கட்டிட சுவருக்கும், சிலாப்பிற்கும் 7 அடி இருந்தது. இதனால் அந்த நாயால் மேலே வர முடியவில்லை. இதனை தொடர்ந்து நாயை மீட்க தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே நிலைய அலுவலர் ஜவான்ஸ் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து நாயின் அருகே சென்றனர். அங்கு மாணவர்கள் கொடுத்த பிஸ்கெட்டை அந்த நாய்க்கு கொடுத்தனர். அந்த நாயும் படபடவென சாப்பிட்டது. பின்னர் தண்ணீரும் கொடுத்து அந்த நாயை வீரர்கள் ஆசுவாசப்படுத்தினர். தொடர்ந்து நாயை அங்கிருந்து மீட்டனர். அந்த சந்ேதாசத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாய் வாலாட்டியபடி சென்றது.
இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், வெள்ளிக்கிழமை மாலையில் பள்ளிக்கூடம் முடியும் நேரத்தில் அந்த நாய் எப்படியோ 3-வது மாடிக்கு சென்றுள்ளது. அப்போது கட்டிட சுவரில் இருந்து சிலாப்பில் குதித்த நாயால் மேலே வர முடியவில்லை. மேலும் கீழேயும் குதிக்க முடியவில்லை.
அதே சமயத்தில் 2 நாட்கள் விடுமுறை என்பதால் பள்ளியில் யாரும் இல்லை. இதனால் நாய் 2 நாட்களாக உணவும், தண்ணீரும் இன்றி அங்கேயே பரிதவித்திருக்கலாம் என தெரிவித்தனர்.