மருத்துவ படிப்பு கனவு நனவாகிறது டாக்டர் ஆகும் போலீஸ்காரர்

போலீஸ்காரர் ஒருவர் நீட் தேர்வு எழுதி டாக்டர் ஆகிறார். அவருக்கு கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் இடமும் கிடைத்திருக்கிறது.

Update: 2023-07-27 23:37 GMT

சென்னை,

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் சிவராஜ். 2016-ம் ஆண்டு பிளஸ்-2 வகுப்பை முடித்த இவர், உயர்கல்வி படிப்பை பி.எஸ்சி. வேதியியல் பட்டப் படிப்பை படித்து முடித்தார்.

2020-ம் ஆண்டில் காவலர் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்று அந்தப் பணியிலும் சேர்ந்தார். தற்போது அவர் ஆவடி சிறப்பு காவல் படையில், இரண்டாம் நிலை போலீஸ்காரராக இருந்து வருகிறார்.

டாக்டர் ஆசை கனவு

படித்து முடித்தோம், பணியில் சேர்ந்தோம் என்று அவர் நினைக்காமல், டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற தன் சிறுவயது ஆசையை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என ஆர்வத்தில் மீண்டும் புத்தகத்தை கையில் எடுத்து இருக்கிறார்.

அவ்வாறு படித்த சிவராஜ் கடந்த ஆண்டு நீட் தேர்வில் பங்கு பெற்று அதில் 268 மதிப்பெண் மட்டுமே பெற்று இருந்துள்ளார். கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு கலந்தாய்விலும் பங்கு பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு மருத்துவ படிப்பு இடம் கிடைக்கவில்லை.

இருந்தாலும் தன் முயற்சியை கைவிடாமல் மீண்டும் 2-வது ஆண்டாக நடப்பாண்டில் நீட் தேர்வை எதிர்கொண்ட அவர், 400 மதிப்பெண் பெற்று, நேற்று நடந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் கலந்து கொண்டு, தன் சிறுவயது கனவை நனவாக்கி இருக்கிறார். அவருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து இருக்கிறது.

முன் உதாரணம்

இதுகுறித்து சிவராஜ் கூறும்போது, 'என்னுடைய சிறு வயது ஆசை. மருத்துவ படிப்பில் இப்போது எனக்கு இடம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த கட்டமாக போலீஸ் உயர் அதிகாரிகளிடம் விடுப்பில் மருத்துவ படிப்பை தொடரலாமா என்று கேட்க இருக்கிறேன். அதற்கு வாய்ப்பு இல்லை என்றால், காவல் பணியை கைவிட்டு, மருத்துவ படிப்பை தொடர திட்டமிட்டு இருக்கிறேன்.

என்னுடைய குடும்பத்தினரும் இதற்கு பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்கள். நான் மற்ற மாணவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக திகழ வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சியை எடுத்தேன். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்