கழிவுநீரோடையாக மாறி வரும் அகழி

தஞ்சை வடக்கு அலங்கம் பகுதியில் அகழி, கழிவுநீரோடையாக மாறி வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-08-27 20:46 GMT

தஞ்சை வடக்கு அலங்கம் பகுதியில் அகழி, கழிவுநீரோடையாக மாறி வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சை அகழி

தஞ்சை பெரியகோவிலை சுற்றிலும், மேல அலங்கம், வடக்கு அலங்கம், கீழ அலங்கம் பகுதிகளில் அகழி உள்ளது. இந்த அகழிக்கு கல்லணைக்கால்வாயில் இருந்து நீர் வரும். இந்த அகழியில் தண்ணீர் தேங்குவதன் மூலம் தஞ்சை மாநகராட்சி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அகழியை தூர்வாரவும், அகழி கரையின் இருபுறம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கீழ அலங்கம், வண்டிப்பேட்டையில் மட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் தூர்வாரும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

கழிவுநீர் தேக்கம்

இதன்காரணமாக அகழிகளில் மழைநீர், கழிவுநீர் தேங்கி நின்றது. அதில் ஆகாயத்தாமரைகள் அடர்ந்து வளர்ந்தன. குறிப்பாக தஞ்சை வடக்கு அலங்கம் பகுதியில் உள்ள அகழியை ஆகாயத்தாமரைகள் முழுவதும் ஆக்கிரமித்துள்ளன.

மேலும், பிளாஸ்டிக் குப்பைகள், இறைச்சி கழிவுகளுடன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தற்போது கல்லணையில் இருந்து அகழிக்கு தண்ணீர் வருவதால் அகழியில் இருந்த கழிவுநீருடன் கலந்து தண்ணீர் பாசி படர்ந்து கூவம் போல காட்சி அளிக்கிறது.

தொற்று நோய் பரவும்

இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அகழியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அகழியில் தண்ணீர் வந்தும் அதனை பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடக்கு அலங்கம் பகுதியில் உள்ள அகழியில் ஆய்வு மேற்கொண்டு அகழியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

Tags:    

மேலும் செய்திகள்