தமிழகத்தில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் உருவாக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் உருவாக்கவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-04-08 12:41 GMT

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கவேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த ஆட்சியில் பா.ம.க.வின் வலியுறுத்தலை ஏற்று செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் இன்னும் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை இரண்டாகவோ, மூன்றாகவோ பிரிக்கவேண்டிய தேவை உள்ளது. தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் மிகப்பெரிய மாவட்டம் திருவள்ளூர். அதன் இப்போதைய மக்கள்தொகை 41 லட்சம். இது தனிநாடாக இருந்தால் உலகில் 130-ம் பெரிய நாடாக இருந்திருக்கும்.

2-வது பெரிய மாவட்டம் சேலம். 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அதன் மக்கள்தொகை 34.82 லட்சம். அடுத்து கோவை மாவட்டத்தின் மக்கள்தொகை 34.58 லட்சம். இப்போது இந்த இரு மாவட்டங்களின் மக்கள்தொகை 38 லட்சத்தை கடந்திருக்கும். மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் இந்த இரு மாவட்டங்களும் உலகில் 133, 134-வது பெரிய நாடுகளாக இருந்திருக்கும்.

இவற்றுக்கு அடுத்தப்படியாக 34 லட்சம் பேரை கொண்ட மதுரை மாவட்டம் 136-வது நாடாகவும், திருச்சி 137-வது பெரிய நாடாகவும் இருந்திருக்கும். 100-க்கும் மேற்பட்ட நாடுகளை விட அதிக மக்களை கொண்ட இவை இன்னும் ஒற்றை மாவட்டமாக நீடிப்பது சிறந்த நிர்வாகத்துக்கு ஏற்றதல்ல.

திருவண்ணாமலை மாவட்டத்தின் மக்கள்தொகை இன்றைய நிலையில் 27 லட்சத்தை கடந்திருக்கக்கூடும். திருவண்ணாமலை மாவட்டம் தனி நாடாக அறிவிக்கப்பட்டால் உலகின் 143-வது பெரிய நாடாக இருக்கும். இவ்வளவு பெரிய மாவட்டத்தை ஒரு மாவட்ட ஆட்சியர் நிர்வகிப்பதும், வளர்ச்சி திட்டப்பணிகளை திறம்பட செயல்படுத்துவதும் சாத்தியமல்ல.

இதற்கு ஒரே தீர்வு திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்குவது மட்டும் தான். திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இணையான மக்கள்தொகை கொண்ட தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களும் பிரிக்கப்படவேண்டியவை தான்.

தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து கும்பகோணத்தை தலைமையிடமாகக்கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படவேண்டும் என்று அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது கும்பகோணம் மாவட்டம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

நானும் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். முதல்-அமைச்சருக்கு கடிதமும் எழுதினேன். அங்குள்ள மக்களின் உணர்வுகளை மதித்து புதிய மாவட்டத்தை அமைக்கவேண்டும். 30 லட்சம் மக்கள்தொகையை கொண்ட கடலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களையும் பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகும் கூட, விழுப்புரம் 23 லட்சம் பேருடனும், காஞ்சீபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகும் கூட செங்கல்பட்டு மாவட்டம் 28 லட்சம் பேருடனும் பெரிய மாவட்டங்களாக திகழ்கின்றன. அவையும் கண்டிப்பாக பிரிக்கப்படவேண்டும். தமிழ்நாட்டிலும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்போது மாவட்ட நிர்வாகம் மேம்படும்; உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டங்களையும் பிரித்து, 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் புதிய மாவட்டங்களை உருவாக்கவேண்டும். இதற்கான அறிவிப்பு தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியிடப்படுவதை முதல்-அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்