அரக்கோணத்திலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு நேரடி ரெயில் வசதி செய்ய வேண்டும்

அரக்கோணத்திலிருந்து சென்னைக்கு நேரடி ரெயில் சேவை தொடங்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2022-07-21 18:38 GMT

அரக்கோணம்

அரக்கோணத்திலிருந்து சென்னைக்கு நேரடி ரெயில் சேவை தொடங்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பயணிகள்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் அலுவலகங்களில் வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் வியாபாரிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்னை, எண்ணூர், கடற்கரை, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளுக்கு மின்சார ரெயில்களில் சென்று வருகின்றனர்.

ஆனால் அவர்களில் பலர் ரெயிலில் அமர்வதற்கு இடமின்றி நெருக்கடியில் நின்று கொண்டே சென்று வருகின்றனர்.

மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் மற்றும் இந்திய கடற்படை ஐ.என்.எஸ்.ராஜாளி ஆகியவற்றில் உள்ளவர்களும் வேலை சம்பந்தமாக வெளி மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.

எனவே, தெற்கு ரெயில்வே பொது மக்கள் நலன் கருதி தற்போது இயக்கப்பட்டு வரும் அனைத்து மெமு ரெயில்களை 12 பெட்டிகளை கொண்டதாக இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து பயணிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:-

அரக்கோணம் சந்திப்பு - திருவண்ணாமலை இடையே தினமும் பகல் வேலையில் புதிய பயணிகள் ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

மேலும் வண்டி எண் அரக்கோணம் - வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் சேவையை பழைய நேரப்படி பகல் 12.10 மணிக்கு இயக்க வேண்டும். அரக்கோணம் சந்திப்பிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு நேரடியாக ரெயில் சேவையை தொடங்க வேண்டும்.

தினசரி ரெயிலாக...

சென்னையிலிருந்து அரக்கோணம் சந்திப்பு மார்க்கமாக இயக்கப்படும் மின்சார ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தடைவதில்லை. எனவே ரெயில்கள் சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரெயில் (16087 - 16088) வாரம் 5 நாட்களுக்கு பதிலாக தினசரி ரெயிலாக இயக்கவும்,

அரக்கோணம் சந்திப்பு ரெயில் நிலைய முகப்பு பகுதியில் ரெயில்களின் விவரங்களை பெரிய எல்.ஈ டி. டிஸ்பிளே திரையில் தெரிந்து கொள்ளும் வசதி, அனைத்து நடை மேடைகளிலும் ரெயில்வரும்போது எந்தெந்த பெட்டிகள் எங்கு நிற்கும் என்பதை அறிய எல்.ஈ.டி.திரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.

அரக்கோணம் - பெங்களூர் பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க கோரியும், அரக்கோணம் - காட்பாடி - வேலூர் சிறப்பு விரைவு ரெயில்களை மீண்டும் சாதாரண பயணிகள் ரெயிலாக இயக்க வேண்டும்.

சென்னையிலிருந்து அரக்கோணம் ஏசி லோகோ வரை இருக்கும் 3 மற்றும் 4-வது இருப்பு பாதையை விரைந்து மூன்று மற்றும் நான்காவது நடை மேடையுடன் இணைக்க வேண்டும்.

சென்னை சென்ட்ரல் - மங்களூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12685 / 12686) சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்(12623 / 12624) ஆகிய ரெயில்கள் அரக்கோணத்தில் நிற்பதில்லை. அனைத்து ரெயில்களும் அரக்கோணத்தில் நின்று செல்ல வேண்டும்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு ஆகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்