பேச்சிப்பாறைக்கு படகில் சென்று படிக்கிறோம்: பள்ளிக்கூடம் செல்ல ஒரு நாளைக்கு ரூ.40 செலவாகிறது-கலெக்டரிடம் காணியின மாணவர்கள் வேதனை

பள்ளிக்கூட வசதியில்லாததால் 5-ம் வகுப்பு முதல் படிக்க ஒரு நாளைக்கு ரூ.40 செலவாகிறது என கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் காணியின மாணவர்கள் தெரிவித்தனர்.

Update: 2023-05-22 18:45 GMT

நாகர்கோவில், 

பள்ளிக்கூட வசதியில்லாததால் 5-ம் வகுப்பு முதல் படிக்க ஒரு நாளைக்கு ரூ.40 செலவாகிறது என கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் காணியின மாணவர்கள் தெரிவித்தனர்.

கலந்துரையாடல் கூட்டம்

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த காணி பழங்குடியினத்தை சேர்ந்த 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடந்தது.

இதற்கு கலெக்டர் ஸ்ரீதா் தலைமை தாங்கினார். பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலை வகித்தார்.

வேதனையை பகிர்ந்த மாணவர்கள்

நிகழ்ச்சியில் மாணவர்கள் பேசுகையில் கூறியதாவது:-

தச்சமலை, தோட்டமலை பகுதியில் தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. அங்கிருந்து மேல்படிப்பு படிக்க பேச்சிப்பாறை வரவேண்டியுள்ளது. அதற்கு படகில் செல்ல வேண்டும். இதற்காக தினமும் பள்ளிக்கு சென்று வர ரூ.40 செலவாகிறது. கூலி தொழில் செய்யும் எங்களது பெற்றோரின் சொற்ப வருமானத்தில் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பலர் பள்ளி, கல்லூரிக்கு செல்லாமல் இடையில் நின்று விடுகின்றனர். இதற்கு உரிய தீர்வு காண வேண்டும். எனவே எங்கள் படிப்பை தொடர எங்கள் பகுதியிலேயே உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளை தொடங்க வேண்டும்.

தங்களது பகுதிகளில் செல்போன் சிக்னல் கிடைக்காததால், ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க முடியவில்லை. பல்வேறு இடங்களில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. மழை காலங்களில் அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது. பல வீடுகளில் மின் இணைப்பு வசதி இல்லை. கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதற்கு பதில் அளித்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

காணியின மாணவ, மாணவிகள் உயர் கல்வி படிப்பதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாடப்பிரிவில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் பேசப்பட்டது. மாணவர்களின் கோரிக்கை மீது தனி கவனம் செலுத்தப்படும். 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு மேற்படிப்பு பயில்வதற்கு மாவட்ட நிர்வாகம் தேவையான உதவிகள் செய்யும்.

சாலை, மின்சாரம் மற்றும் கழிவறை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே மின்சார வசதி இல்லாத 4 கிராமங்களில் சோலார் மூலம் மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 16 கிராமங்களில் சோலார் மின் விளக்குகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கழிவறை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். மாணவர்களின் படகு பயணத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டியது தொடர்பாக அங்கு கள ஆய்வு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். காணி பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பயில்வது உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கள ஆய்வு

இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட வனத்துறை அலுவலகம், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.

நிகழ்ச்சியில் பழங்குடியினர் தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர் வின்சென்ட் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்