இரவில் இருள் சூழ்ந்து கிடக்கும் சாலை

கும்பகோணத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவில் சாலை இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-14 20:35 GMT

கும்பகோணம்:

கும்பகோணத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவில் சாலை இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தார்ச்சாலை

கும்பகோணம் சோலையப்பன் தெரு, ஆலயடிரோடு பகுதிக்கு அருகே உள்ள காவிரி ஆற்றின் கரையையொட்டி சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை இந்த பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தாராசுரம் பைபாஸ் சாலையை சென்றடைய குறுக்கு பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வேண்டுகோளை ஏற்று இந்த மண் சாலை, தார்ச்சாலையாக அமைக்கப்பட்டது. இதனால் இந்த சாலை வழியாக தற்போது போக்குவரத்து அதிகரித்துள்ளது.

மின்விளக்கு வசதி

கும்பகோணம் நகரில் இருந்து தாராசுரம் பைபாஸ் சாலையை விரைவாகவும், போக்குவரத்து நெரிசல் இல்லாமலும் சென்றடைய இந்த சாலை மிகவும் வசதியாக இருப்பதால் ஏராளமான பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலையின் இருபுறமும் முள் செடிகள், புதர்கள் மண்டி கிடக்கிறது. இந்த வழித்தடத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இரவில் இந்த சாலை வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

நடவடிக்கை

குறிப்பாக பெண்களும், பள்ளி, கல்லூரி மாணவிகளும் இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக செல்ல அச்சப்பட்டு வருகின்றனர். மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் முட்புதர்களுக்கு சென்று காயம் அடைகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக காவிரி கரையையொட்டி சாலையில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்