திண்டுக்கல்லில் பிரபல ஜவுளிக்கடையில் துணிகர கொள்ளை

திண்டுக்கல்லில் பிரபல ஜவுளிக்கடையில் துணிகர கொள்ளை நடந்தது. லாக்கரை உடைக்க முடியாததால் கல்லாப்பெட்டியில் கைவரிசை காண்பித்து தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-06-16 21:00 GMT

திண்டுக்கல்லில் பிரபல ஜவுளிக்கடையில் துணிகர கொள்ளை நடந்தது. லாக்கரை உடைக்க முடியாததால் கல்லாப்பெட்டியில் கைவரிசை காண்பித்து தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜவுளிக்கடை

திண்டுக்கல் கிழக்கு ரதவீதியில் பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இந்த ஜவுளிக்கடை 4 தளங்களுடன் கூடியது ஆகும். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர். அதையடுத்து நேற்று காலை வழக்கம் போல் வியாபாரத்துக்காக ஊழியர்கள் கடையை திறந்தனர்.

பின்னர் ஒவ்வொரு தளத்திலும் விற்பனையில் ஈடுபடும் ஊழியர்கள் தங்களுடைய பகுதிக்கு சென்றனர். அப்போது ஜவுளிக்கடையில் ஆங்காங்கே பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தன. 4 தளங்களிலும் இருந்த கல்லாப்பெட்டிகள் திறந்து கிடந்தன. மேலும் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை காணவில்லை.

லாக்கர் அறை உடைப்பு

அதேபோல் ஜவுளிக்கடையின் 4-வது தளத்தில் உள்ள லாக்கர், ஆவணங்கள் வைப்பு அறை உள்ளது. அந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இந்த காட்சிகளை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு பீரோ திறந்து கிடந்தது. நள்ளிரவில் ஏதோ அசம்பாவிதம் நடைபெற்று இருப்பதை உணர்ந்தனர்.

இதைத்தொடர்ந்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திண்டுக்கல் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், வீரபாண்டி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர்.

மொட்டை மாடி வழியாக...

அப்போது ஜவுளிக்கடையில் இருந்த சில கண்காணிப்பு கேமராக்களை துணி கொண்டு மூடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஜவுளிக்கடைக்கு அருகில் புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்படுகிறது.

அந்த கட்டிடத்தின் வழியாக நள்ளிரவு 12.30 மணிக்கு கொள்ளையன் ஜவுளிக்கடையின் மொட்டை மாடிக்கு வந்து, அங்கிருந்து 4-வது தளத்துக்குள் இறங்கி உள்ளான். மேலும் தன்னை அடையாளம் கண்டுவிட கூடாது என்பதற்காக கண்காணிப்பு கேமராக்களை துணியால் மூடியிருக்கிறான். அதன்பின்னர் தனது கைவரிசையை காண்பிக்க தொடங்கி உள்ளான்.

கல்லாப்பெட்டிகளில் கைவரிசை

அதில் 4-வது மாடியில் இருக்கும் லாக்கர் அறையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளான். அங்கு இருந்த லாக்கரை உடைக்க முயன்ற போது முடியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையன் அங்கிருந்த பீரோவை திறந்து பார்த்த போது அதில் பணம் எதுவும் சிக்கவில்லை. இதனால் ஜவுளிக்கடையில் ஒவ்வொரு தளத்துக்கும் சென்று அங்கிருந்த கல்லாப்பெட்டிகளை திறந்து இருக்கிறான்.

பின்னர் கல்லாப்பெட்டிகளில் இருந்த ரூ.1 லட்சத்தை மட்டும் எடுத்து கொண்டு தப்பி சென்றது தெரியவந்தது. லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்சம் தப்பியதாக போலீசார் கூறினர். இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கதவு, லாக்கர், பீரோ, கல்லாப்பெட்டியில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

திட்டமிட்டு கொள்ளையா?

இதற்கிடையே 4-வது மாடியில் லாக்கர் இருப்பதும், அருகில் உள்ள கட்டிடம் வழியாக மொட்டை மாடிக்கு சென்றால் துணிக்கடைக்குள் இறங்கி விடலாம் என்பதும் கொள்ளையனுக்கு எப்படி தெரிந்தது என்பது போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் கூட்ட நெரிசல் மிகுந்த நாட்களில் கொள்ளையன் ஜவுளிக்கடைக்கு வந்து நோட்டமிட்டு சதித்திட்டம் தீட்டினாரா அல்லது கடையின் முன்னாள் ஊழியர்கள் யாராவது? உடந்தையாக இருந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல்லில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்