ஓமியோபதி கிளினிக்கில் துணிகர கொள்ளை
நாகர்கோவிலில் ஓமியோபதி கிளினிக்கில் கதவை உடைத்து ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி அணிந்த மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.
நாகா்கோவில்,
நாகர்கோவிலில் ஓமியோபதி கிளினிக்கில் கதவை உடைத்து ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி அணிந்த மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.
கிளினிக்கில் பணம் கொள்ளை
நாகர்கோவில் கோட்டார் கேப்ரோடு பகுதியை சேர்ந்தவர் எபி மோசஸ் (வயது 44), டாக்டர். இவருடைய மனைவி மெர்சி. இவரும் டாக்டராவார்.
கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கேப் ரோடு பகுதியில் ஓமியோபதி கிளினிக் ஒன்றை நடத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 19-ந் தேதி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மெர்சி வழக்கம் போல் இரவு கிளினிக்கை பூட்டி விட்டு சென்றார்.
நேற்றுமுன்தினம் காலை கிளினிக்கிற்கு வந்த மெர்சிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கிளினிக்கின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உடனே அவர் பதற்றத்துடன் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் அங்கு வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. இரவில் யாரோ கிளினிக்கின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
முகமூடி அணிந்த கொள்ளையன்
இதுபற்றி கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மர்ம ஆசாமி ஒருவர் முகமூடி அணிந்து கொண்டு கிளினிக்கின் கதவை உடைத்து உள்ளே செல்வதும், பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு பொருட்களை தூக்கியபடி வெளியே வரும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.
கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி அணிந்த கொள்ளையன் யார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.
தனியார் மருத்துவமனை கிளினிக்கில் புகுந்து முகமூடி அணிந்த கொள்ளையன் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.