முன்கூட்டியே வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு
மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குமாி மாவட்டத்தில் தகுதியான பெண்களின் வங்கி கணக்குகளில் ஆயிரம் ரூபாய் முன்கூட்டியே செலுத்தப்பட்டது. இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாகர்கோவில்,
மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குமாி மாவட்டத்தில் தகுதியான பெண்களின் வங்கி கணக்குகளில் ஆயிரம் ரூபாய் முன்கூட்டியே செலுத்தப்பட்டது. இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மகளிர் உரிமை தொகை
குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 5 லட்சத்து 77 ஆயிரத்து 127 ரேஷன் கார்டு தாரர்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற முகாம்களில் மொத்தம் 4 லட்சத்து 19 ஆயிரத்து 659 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்கப்பட்டன. ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 468 பேர் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்த நிலையில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான பயனாளிகளுக்கு 15-ந் தேதி முதல் அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
முன்கூட்டியே கணக்கில் வரவு
குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் முதற்கட்டமாக 14 ஆயிரம் பேர் ஆயிரம் ரூபாய் பெற தகுதியானவர்கள் என்று அறிவிப்பு வெளியானது. அதில் 2 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் இன்று ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
ஆனால் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகுதியான பெண்களின் வங்கி கணக்கில் முன்கூட்டியே அதாவது நேற்றே ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகளுக்கு ஒரு ரூபாய் மற்றும் 10 பைசா செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.
பெண்கள் மகிழ்ச்சி
இந்த நிலையில் ஏராளமான பெண்களின் வங்கி கணக்கில் நேற்று மதியத்துக்கு பிறகு ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதே நேரத்தில் விண்ணப்பித்த பல பெண்களுக்கு பணம் செலுத்தப்படவில்லை. இதில் ஏழை பெண்கள் அதிகம் உள்ளனர். எனவே தங்களுக்கு எப்போது பணம் கிடைக்கும் என்று அந்த பெண்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.