அழகியமண்டபத்தில் நகை வாங்குவது போல் நடித்து திருடிய தம்பதி; கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்தது

அழகியமண்டபத்தில் நகை வாங்குவது போல் நடித்து திருடிய தம்பதியை கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்தது. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Update: 2023-06-01 18:45 GMT

தக்கலை, 

அழகியமண்டபத்தில் நகை வாங்குவது போல் நடித்து திருடிய தம்பதியை கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்தது. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மோதிரம் திருட்டு

களியக்காவிளையை சேர்ந்தவர் ஹாஜா நவாப். இவர் அழகியமண்டபத்தில் நகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று மதியம் 3 மணிக்கு ஒரு பெண் ஊழியர் மட்டும் இருந்தார். அப்போது இளம் வயதுடைய ஒரு ஆணும், பெண்ணும் வாடிக்கையாளர் போல் வந்தனர். அங்கு தங்களை கணவன், மனைவி என அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அப்போது மோதிரங்களை எடுத்து பெண் ஊழியர் காட்டிக் கொண்டிருந்தபோது பெண் ஊழியரின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் ஒரு மோதிரத்தை நைசாக திருடியுள்ளனர். பிறகு எங்களுக்கு இந்த டிசைன் பிடிக்கவில்லை, வேறு கடைக்கு செல்கிறோம் என கூறினர். அப்போது ஒரு மோதிரம் குறைகிறது என பெண் ஊழியர் தெரிவித்துள்ளார்.

ஜோடி தப்பி ஓட்டம்

பின்னர் அந்த ஜோடியும் மோதிரத்தை தேடுவதை போல் நடித்து விட்டு அங்கிருந்து திடீரென வெளியே வந்து மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் இதுகுறித்து கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே அவர் விரைந்து வந்து கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தார். அதில் அந்த ஜோடி மோதிரத்தை திருடும் காட்சி பதிவாகியிருந்தது தெரியவந்தது.

மேலும் மோதிரத்தை திருடிய ஜோடி ஏற்கனவே கடைக்கு வந்தது தெரியவந்தது. அப்போது பழைய நகைகளை விற்க வேண்டும் என கூறி வந்துள்ளனர். ஆனால் பழைய நகைகளை வாங்க மாட்டோம் என பெண் ஊழியர் அனுப்பி வைத்துள்ளார். இந்த காட்சியும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

இந்த ஆதாரங்களை வைத்து தக்கலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அந்த ஜோடியை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்