பெண் குழந்தையை காய்கறி பையில் வைத்து சுற்றிய தம்பதி
வறுமையின் காரணமாக பெண் குழந்தையை, குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்க காய்கறி பையில் வைத்து மொபட்டில் சுற்றிய தம்பதியை போலீசார் சோதனை செய்து குழந்தையை மீட்டனர்.;
வறுமை
வேலூர் வசந்தபுரம் சின்னத்தெருவை சேர்ந்த சந்திரன் மகன் திருமலை (வயது 33). இவரது மனைவி கலையரசி (28). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. சந்திரன் கூலி வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் திருமலையின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான கலையரசிக்கு திருமலையே பிரசவம் பார்த்ததில் 3 நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்தவுடன் தம்பதியினர் இருவருக்கும் இப்போது இருக்கும் வறுமையான சூழ்நிலையால் குழந்தையை சிறப்பாக வளர்க்க முடியாமல் போகுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனினும் பிறந்த குழந்தையை கைவிட மனமில்லாமல் ஏதாவது காப்பகத்தில் சேர்த்து விடுவதென்று இருவரும் முடிவு செய்துள்ளனர்.
பையில் பெண் குழந்தை
அதற்காக திருமலையும், கலையரசியும் தங்கள் பெண் குழந்தையை காய்கறிகள் வைக்கும் ஒரு பையில் வைத்துக்கொண்டு மொபட்டில் அல்லாபுரம் பகுதியில் சுற்றி வந்துள்ளனர். குழந்தை காப்பகத்தை பற்றி கேள்விப்பட்ட அவர்களால் குழந்தை காப்பகம் எங்குள்ளது என்று தெரியாததால் அல்லாபுரத்தில் சுற்றி வந்துள்ளனர்.
இதனை அந்தப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் தெற்கு போலீசார் பார்த்து சந்தேகத்தின்பேரில் திருமலையை அழைத்து விசாரித்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர் அவரது மொபட்டை சோதனை செய்தபோது பையில் பெண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக குழந்தையை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தையை 2 நாட்கள் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் கணவனே பிரசவம் பார்த்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட கலையரசியையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது திருமலை தான் வறுமையால் இத்தகைய முடிவு எடுத்துவிட்டதாகவும், தானே அந்த குழந்தையை வளர்ப்பதாகவும் கூறியுள்ளார்.