திருக்கண்ணபுரத்தில் சமுதாய கழிவறை திறக்கப்பட்டது
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக திருக்கண்ணபுரத்தில் சமுதாய கழிவறை திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திட்டச்சேரி:
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக திருக்கண்ணபுரத்தில் சமுதாய கழிவறை திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சமுதாய கழிவறை
திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் 108 திவ்ய தேசங்களில் 17-வது திவ்ய தேசமான சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது.
இந்த ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும் சவுரி ராஜ பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி தமிழக அரசால் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் சமுதாய கழிவறை மற்றும் அதன் அருகில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு மூலம் போர்வெல் அமைக்கப்பட்டது.
பக்தர்கள் அவதி
சமுதாய கழிவறை கட்டுமான பணிகள் முழுவதும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு முடிவடைந்தது. பணிகள் முடிந்து 1 ஆண்டு முடிந்தும், இதுவரை சமுதாய கழிவறை மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படாமல் பூட்டிக்கிடந்தது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்களும் அவதிப்பட்டனர். குறிப்பாக பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
திறக்கப்பட்டது
இதுகுறித்த செய்தி தினத்தந்தி நாளிதழில் கடந்த 5-ந் தேதி படத்துடன் பிரசுரமானது. அதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சமுதாய கழிவறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.