கொழுந்தியாளுடன் ஓட்டம் பிடித்த தேங்காய் வியாபாரி

கோவையில் கொழுந்தியாளுடன் ஓட்டம் பிடித்த தேங்காய் வியாபாரியை போலீசார் மீட்டனர்.

Update: 2022-11-09 18:45 GMT

செட்டிபாளையம்

கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தேங்காய் வியாபாரி. 29 வயதான அவருக்கு கடந்த 2½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 1½ வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அந்த வியாபாரிக்கும், அவருடைய மனைவியின் தங்கையான (கொழுந்தியாள்) 25 வயதான திருமணமாகாத இளம்பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 2 பேரும் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் வியாபாரியின் மனைவிக்கு தெரியவந்தது. உடனே அவர் தனது கணவர் மற்றும் தங்கையை கண்டித்தார். அத்துடன் அவர் தனது தங்கையை தனது வீட்டுக்கு வர அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில், தேங்காய் வியாபாரியை திடீரென்று காணவில்லை. அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக உறவினர்கள் விசாரித்தபோது, தேங்காய் வியாபாரி தனது மனைவியின் தங்கையுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.

இது தொடர்பாக வியாபாரியின் மனைவி செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதில், தனது கணவருக்கும், தனது தங்கைக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதால், அவர்கள் 2 பேரும் ஓடி விட்டனர் என கூறி இருந்தார். இதையடுத்து காணவில்லை என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் தேங்காய் வியாபாரி தனது கொழுந்தியாளுடன் மதுரையில் குடும்பம் நடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே போலீசார் மதுரை விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு செட்டிபாளையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். அதில் வெளியான தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:-

கடந்த 8 மாதங்களுக்கு முன் கொழுந்தியாளுடன் தேங்காய் வியாபாரிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. இதை அறிந்த வியாபாரியின் மனைவி, தனது கணவரை கண்டித்துள்ளார். எனவே கள்ளக்காதலுக்கு மனைவி இடையூறாக இருப்பதால் அவரை கொலை செய்ய தேங்காய் வியாபாரி முடிவு செய்தார். அதற்காக அவர் ஆன்லைனில் விஷம் வாங்கி உள்ளார். பின்னர் தனது முடிவை கள்ளக்காதலியிடம் தெரிவித்தார். அதற்கு அவர் அக்காவை கொலை செய்ய வேண்டாம், நாம் எங்காவது சென்று வாழலாம் என்று கூறி உள்ளார். அதன் பின்னரே கடந்த மாதம் 17-ந் தேதி கொழுந்தியாளுடன் வீட்டைவிட்டு ஓடியுள்ளார். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்