சிவகாசி,
உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலரும் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரோஜா பூக்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லெட்டுகள் மற்றும் பரிசு பொருட்களை வாங்கி பிடித்தவர்களுக்கு பரிசளித்து மகிழ்வார்கள்.
ஆனால் இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட் போன்கள் மூலமும் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக காதலர் தின வாழ்த்துக்களை பரிமாறி கொண்டாலும், நேரில் சென்று ரோஜா பூக்கள், வாழ்த்து அட்டைகளை இன்றும் கொடுத்து தான் வருகின்றனர்.
பரிசு பொருட்கள்
காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த பெரும்பாலும் இந்த நாட்களில் பரிசு பொருட்கள் மற்றும் ரோஜாப்பூக்களை வழங்குவது உண்டு. இதனால் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தையொட்டி தமிழ்நாட்டில் ஓசூரில் இருந்தும், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்தும் அதிக அளவில் ரோஜாப்பூக்கள் விற்பனைக்கு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்தநிலையில் நேற்று காலை சிவகாசியில் உள்ள பெரும்பாலான பூக்கடைகளில் அதிக அளவில் ரோஜாப்பூக்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
விற்பனை அமோகம்
இந்த பூக்களை சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள சில்லரை வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி சென்றனர். சிவகாசியில் பல வண்ண ரோஜாக்கள் விற்பனை செய்யப்பட்டதால் இளம்பெண்களும், வாலிபர்களும் பூக்கடைகளுக்கு நேரடியாக சென்று தங்களுக்கு விருப்பமான ரோஜாக்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.
வழக்கமான விலையைவிட சற்று விலை அதிகரித்து இருந்தாலும் காதலர்கள் கூடுதல் விலை கொடுத்து பூக்களை வாங்கி சென்றனர். இதனால் சிவகாசி பகுதியில் நேற்று ரோஜா பூக்களின் விற்பனை அமோகமாக இருந்தது.