100 ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும்
காட்பாடியில் 100 ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா
காட்பாடி ஓடைப்பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கி பயணிகள் நிழற்கூடத்தை திறந்து வைத்து பேசினார்.
அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த நிதியை அரசு சார்பில் செயல்படுத்தப்படாத திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். பஸ்சுக்காக பொதுமக்கள் வெயில், மழையில் காத்துக்கிடக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் குடிகாரர்கள் ஆக்கிரமிப்பு செய்யாதபடி போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
ரேஷன் கடை திறப்பு விழா
அதைத்தொடர்ந்து காட்பாடி 4-வது வார்டு செங்குட்டை பேங்க் காலனியில் ரூ.8 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன்கடையை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்து பேசினார். அப்போது இந்தப் பகுதி மக்களின் தேவையை கருத்தில் கொண்டு ரூ.8 லட்சத்தில் 802 குடும்ப அட்டைகள் உள்ள ரேஷன் கடை புதிதாக திறக்கப்பட்டுள்ளது.
முன்பு ரேஷன் கடை அரிசியை கோழிக் கூட சாப்பிடாது என்பார்கள். ஆனால் இப்போது அரிசி அனைத்தும் அற்புதமாக உள்ளது என எதிர்கட்சி உறுப்பினர்களே பாராட்டுகிறார்கள். தனியார் விற்பனை செய்யும் பொருட்கள்தான் நன்றாக இருக்கும் என்ற நிலைமாறி ரேஷன் பொருட்களும் நன்றாக இருக்கிறது என வாங்கி செல்கிறார்கள். இந்த தொகுதி மக்களுக்கு நிறைய திட்டங்கள் செய்துள்ளேன். குறிப்பாக உப்பு தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த மக்களுக்கு பாலாற்று குடிநீர் கொண்டு வந்தேன். ரெயில்வே பாலம் சிறிதாக இருந்தது. அதனை பெரிதுபடுத்தினேன். மேலும் ஒரு ரெயில்வே மேம்பாலம் கட்ட எம்.பி., மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
100 ஏக்கரில் சிப்காட்
தற்போது 200 படுக்கை கொண்ட அரசு மருத்துவமனை, அரசுக்கல்லூரி ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளது. காட்பாடி- சித்தூர் ரோட்டில் உள்ள டெல் கம்பெனி மூடப்பட்டது. இந்த கம்பெனி பெல் கம்பெனியாக மாற்றப்பட்டுள்ளது. அதன் எதிரே 100 ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலையில் காட்பாடி தொகுதியில் உள்ளவர்களுக்குதான் பணி வழங்கவேண்டும் என நான் தொழில்துறை அமைச்சரிடம் கூறியுள்ளேன்.
காட்பாடியில் ஐ.டி. பார்க் அமைக்கப்பட உள்ளது. 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் குடிநீர் திட்ட பணிகளை முறையாக செயல்படுத்தாமல் பில் போட்டு ஏமாற்றிவிட்டனர். இவை தற்போது நிவர்த்தி செய்யப்பட்டு அதனை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கூடுதலாக ஒரு போலீஸ் நிலையம்
காட்பாடியில் கூடுதலாக ஒரு போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். மேலும் விருதம்பட்டு, திருவலத்திற்கு என தனித்தனியாக இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., துணைமேயர் எம்.சுனில்குமார், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, ஒன்றியக் குழு தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் சரவணன், கவுன்சிலர்கள் சித்ரா லோகநாதன், கே.அன்பு, பூஞ்சோலை சீனிவாசன், சரவணன், இளைஞர் அணி பகுதி துணை அமைப்பாளர் கமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.