மதுஅருந்தும் இடமாக மாறி வரும் சிறுவர் விளையாட்டு பூங்கா

மதுஅருந்தும் இடமாக மாறி வரும் சிறுவர் விளையாட்டு பூங்கா

Update: 2022-11-16 19:43 GMT

தஞ்சை திரிபுரசுந்தரி நகரில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா மது அருந்தும் இடமாக மாறி வருகிறது. இதில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிறுவர் விளையாட்டு பூங்கா

தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் புதிதாக பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இது தவிர பழைய பூங்காங்கள் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது. சில பூங்காக்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் ஒரு சில இடங்களில் உள்ள பூங்கா மது அருந்தும் இடமாக மாறி வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள திரிபுரசுந்தரி நகரில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா மது அருந்தும் இடமாக மாறி வருகிறது.

மது அருந்தும் இடம்

இந்தப்பூங்காவில் காலை, மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் பெண்கள் குழந்தைகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். மேலும், அப்பகுதி பெண்கள், ஆண்கள், முதியோர் காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் இரவு, பகல் எந்நேரமும் சமூகவிரோதிகள், சிலர் அமர்ந்து கொண்டு மது அருந்துவதும், உணவுப் பொருட்களை தின்று விட்டு, கண்ட இடங்களில், மதுப் பாட்டில்களையும், உணவு கழிவுகளையும் வீசிச்செல்வதுமாக உள்ளனர்.

பொதுமக்கள் அச்சம்

சில வேளைகளில் இங்கு வந்து மது அருந்தும் ஆசாமிகள் ஆபாசமான வார்த்தைகளால் சச்சரவில் ஈடுபடுவதும் வழக்கமாக உள்ளது. மேலும், ஆடைகள் அவிழ்ந்து அருவருக்கத்தக்க நிலையில், மதுபோதையில் அங்கேயே படுத்து விடுகின்றனர். இந்த சிறுவர் விளையாட்டு பூங்கா அருகிலேயே கோவில், ஆஸ்பத்திரி உள்ளன.

இந்த பூங்கா எந்த நேரமும் மதுப்பிரியர்களின் ஆக்கிரமிப்பில் இருப்பதால், பெண்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வருவதற்கு அச்சப்படும் சூழ்நிலை உள்ளது. மேலும், இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள், பெண்கள், முதியவர்கள் நடைபயிற்சி செய்ய அச்சப்பட்டு பூங்காவுக்கு வருவதையே தவிர்த்து வருகின்றனர்.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் ராஜா கூறுகையில், திரிபுரசுந்தரி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான சிறுவர் பூங்கா மதுஅருந்தும் இடமாக மாறி வருகிறது. எனவே இந்த இடத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆய்வு செய்து, மது அருந்திவிட்டு சச்சரவில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்காவை சிறுவர்கள், பெண்கள், குழந்தைகள் வந்து செல்லும் இடமாகவும், நடைபயிற்சி செய்யும் இடமாகவும் மீண்டும் மாற்றி அமைக்க வேண்டும்"என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்