மதுரவாயலில் செல்போன் கடையை உடைத்து கொள்ளை - சம்பவ இடத்திலேயே மடக்கி பிடித்த போலீஸ்..!
சென்னை மதுரவாயலில் செல்போன் சர்வீஸ் கடையை உடைத்து கொள்ளையடித்த நபரை ரோந்து பணியில் இருந்த போலீசார் மடக்கி பிடித்தனர்.
போரூர்:
சென்னை மதுரவாயல் கங்கையம்மன் நகர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் மதுரவாயல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதி 7வது தெருவில் செயல்பட்டு வரும் மொபைல் போன் சர்வீஸ் சென்டர் கடையை உடைத்த மர்ம நபர்கள் 4 பேர் அங்கிருந்து செல்போன்களை சுருட்டிக் கொண்டு வெளியே வந்தனர்.
இதை கண்ட ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் குணசேகரன் அவர்களை விரட்டி சென்றார். அதில் ஒருவர் மட்டும் சிக்கிக் கொண்டார். மற்ற 3 பேர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடிவிட்டனர்.
பிடிபட்ட வாலிபர் ராயப்பேட்டையை சேர்ந்த சித்தார்த் (வயது 19) என்பதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 8 செல்போன்கள், ரூ.2 ஆயிரம் ரொக்கம், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய சித்தார்த்தின் கூட்டாளிகள் 3 பேரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.