குறுவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி

குளித்தலையில் குறுவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது. இதில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Update: 2023-08-04 18:02 GMT

இறகுப்பந்து போட்டி

குளித்தலையில் குறுவட்ட அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், குளித்தலை பேட்மிட்டன் அகாடமி உள் விளையாட்டு அரங்கில் நேற்று இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார். குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வைரமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் குளித்தலை குறுவட்ட அளவில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மாணவிகள் முதலிடம்

இதில் 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர், இரட்டையர் போட்டியில் குளித்தலையில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடத்தை பெற்றனர். 17 வயதுக்குட்பட்டோர் மாணவர்கள் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியில் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். அதுபோல மாணவிகள் பிரிவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கானபிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியில் தனியார் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். அதே பிரிவில் மாணவிகளுக்கான போட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர்.

மாவட்ட போட்டிக்கு தகுதி

அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இதில் உடற்கல்வி இயக்குனர் ராஜசேகர், உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், ரோனிபிரபாகரன், சாயிராபேகம், அமலா, சரவணன், ஜெயபிரகாஷ் மற்றும் பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்