குப்பை கொட்டுபவர்களை புகைப்படம் எடுத்து கொடுத்தால் ரூ.500 ரொக்கப்பரிசு
பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களை புகைப்படம் எடுத்து கொடுத்தால் ரூ.500 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு.
வேலூர் மாநகராட்சி குப்பை தொட்டிகள் இல்லாத மாநகராட்சியாகும். தூய்மை பணியாளர்கள் 60 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கும் சென்று குப்பைகளை பெற்று வருகிறார்கள். பொதுமக்கள் வீட்டிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரித்தாலும் பலர் பொது இடங்களில் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதனை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட 27-வது வார்டு பழைய முருகன் தியேட்டர் பகுதியில் கவுன்சிலர் சதீஷ்குமார் பாச்சி சார்பில் நூதன விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
அதில் 'உறைக்கிற மாதிரி ஒரு வார்த்தை' என்ற தலைப்பில் பணத்தை மட்டும் கரெக்டா பேங்கில் போடுறிங்க, அதுமாதிரி குப்பையையும் குப்பை வண்டியில் போட்டால் என்ன?. மீறி குப்பை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களை போட்டோ எடுத்து கொடுத்தால் ரூ.500 ரொக்கப்பரிசு வழங்கப்படும். இது தொடர்பாக 9944581740 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.