அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கண்காணிக்க உயர்மட்ட குழு அமைக்க கோரி வழக்கு - தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கண்காணிக்க உயர்மட்ட குழு அமைக்க கோரிய வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2023-04-22 20:37 GMT

சென்னை,

புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் அனந்தராமன். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக விதிகளை பின்பற்றாமல் பேராசிரியர்கள், அலுவலர்கள் என்று பலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், பேராசிரியர்கள் உள்ளிட்ட இதர பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நியமனங்களிலும் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதுதொடர்பாக புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அன்றாட நிர்வாகத்தை கண்காணிக்க உயர்மட்ட குழு ஒன்று அமைத்து உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர், இந்த வழக்குக்கு தமிழ்நாடு அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்