மும்பை பெண்ணை கோவைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த வாலிபர் மீது வழக்கு
முகநூல் மூலம் பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறி மும்பை பெண்ணை கோவைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆர்.எஸ்.புரம்
முகநூல் மூலம் பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறி மும்பை பெண்ணை கோவைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
முகநூல் மூலம் பழகினார்
கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 24). இவருக்கும் மும்பையை சேர்ந்த 27 வயதான பெண்ணுக்கும் முகநூல் மூலம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. இதனால் 2 பேரும் தங்கள் செல்போன் எண்களை பறிமாறிக்கொண்டு அடிக்கடி பேசினார்கள்.
இதனால் அவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது. இதையடுத்து 2 பேரும் செல்போன் மூலம் தினமும் பேசிக்கொண்டனர். அத்துடன் வீடியோ கால் மூலமாகவும் அடிக்கடி பேசி வந்தனர். இதற்கிடையே செந்தில்குமார் அந்த பெண்ணிடம் உன்னை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது, கோவை எப்போது வருவீர்கள் என்று கேட்டு உள்ளார்.
பலாத்காரம்
அதற்கு அந்த பெண், முக்கியமான நிகழ்ச்சி என்றால் சொல்லுங்கள் நான் வருகிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இந்தநிலையில் செந்தில்குமாரின் பிறந்தநாள் வந்தது. இதற்காக அவர் தனது காதலியை கோவைக்கு வருமாறு கூறினார். இதையடுத்து பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக அந்த பெண் விமானம் மூலம் கோவை வந்தார்.
பின்னர் 2 பேரும் பல இடங்களுக்கு சுற்றி பேசி மகழ்ச்சியாக இருந்தனர். இரவில் அந்த பெண்ணை செந்தில்குமார், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்க வைத்தார். அப்போது அவர் அந்த பெண்ணிடம் நான் உன்னைதான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசைவார்த்தை கூறி அவரை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
வாலிபர் மீது வழக்கு
அத்துடன் அவர் அந்த பெண்ணிடம் இருந்து பல்வேறு கட்டங்களாக ரூ.70 ஆயிரத்தையும் பெற்றார். பின்னர் அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை. அத்துடன் அவர் அந்த பெண்ணிடம் பேசுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வேறு செல்போன் எண்ணில் இருந்து செந்தில்குமாருக்கு தொடர்பு கொண்டு பேசினாலும் அவர் பேசவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கோவை மாநகர் மேற்கு பகுதி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.