மதுபாட்டில்களை ஏற்றி சென்ற சரக்கு வேனின் டயர் வெடித்து விபத்து
விராலிமலை அருகே மதுபாட்டில்களை ஏற்றி சென்ற சரக்கு வேனின் முன் பக்க டயர் வெடித்தது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சரக்கு வேன்
திருச்சி துவாக்குடியில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழக கிடங்கில் இருந்து பொன்னமராவதி அருகே பாலக்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் சில்லறை மதுபான விற்பனை கடைக்கு சுமார் 200 பீர் பெட்டிகள், 200 மதுபான பெட்டிகள் என மொத்தம் 400-க்கும் மேற்பட்ட மதுபான பெட்டிகளுடன் சரக்கு வேன் நேற்று மாலை திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
சரக்கு வேனை துவாக்குடியை சேர்ந்த முரளி (வயது 40) என்பவர் ஓட்டியுள்ளார்.
விபத்து
விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடும்பாளூர் அருகே சரக்கு வேன் சென்றபோது எதிர்பாராதவிதமாக முன் பக்க டயர் வெடித்துள்ளது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி நின்றது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை போலீசார் சாலையின் நடுவே நின்ற வேனை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர்.
இந்த விபத்தில் வேன் கவிழாமல் நின்றதால் டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். அதே போல் வேனில் இருந்த 400-க்கும் மேற்பட்ட மதுபான பெட்டிகளும் சேதமின்றி தப்பியது.