தாறுமாறாக ஓடிய கார் மின்கம்பத்தில் மோதல்
தக்கலையில் தாறுமாறாக ஓடிய கார் மின்கம்பத்தில் மோதியது.
தக்கலை:
தக்கலையில் தாறுமாறாக ஓடிய கார் மின்கம்பத்தில் மோதியது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மார்க்கெட் பகுதியை சேர்ந்த தாமஸ் மகன் ஜான் மோசஸ் (வயது 28). இவர் நேற்று தன்னுடைய தாய், பெரியம்மா, சகோதரி ஆகியோருடன் சுற்றுலா செல்வதற்காக அதிகாலை 3.30 மணிக்கு வீட்டில் இருந்து காரில் புறப்பட்டனர். காரை ஜான் மோசஸ் ஓட்டினார். இவர்களுடன் சங்கரன்கோவிலை சோ்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 3 கார்களில் பின்தொடர்ந்து வந்தனர்.
முதலில் கன்னியாகுமரி சென்று சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். பின்னர் பத்மநாபபுரம் அரண்மனையை பார்க்க புறப்பட்டனர். காலை 9.40 மணிக்கு தக்கலை பேலஸ் ரோட்டில் வந்த போது ஜான் மோசஸ் ஓட்டி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர மின்கம்பத்தின் மீது மோதியது. பிறகு மின்கம்பத்திற்கும், ஆஸ்பத்திரி சுற்றுச்சுவருக்கும் இடையே புகுந்தபடி கார் நின்றது.
அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 4 பேர் உயிர் தப்பினர். அவர்களை அங்கு நின்ற பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தாறுமாறாக ஓடிய கார் பொதுமக்கள் மீது மோதியிருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக அதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை. மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.