கார் மெக்கானிக்கை கழுத்தை இறுக்கி கொலை; தந்தை வெறிச்செயல்-பரபரப்பு தகவல்கள்
வேடசந்தூர் அருகே கார் மெக்கானிக்கை கழுத்தை இறுக்கி கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.;
வேடசந்தூர் அருகே கார் மெக்கானிக்கை கழுத்தை இறுக்கி கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.
கார் மெக்கானிக் சாவு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). கொத்தனார். இவருக்கு சரத்குமார் (25) என்ற மகனும், சங்கீதா (25) என்ற மகளும் இருந்தனர். இவர்கள் 2 பேரும் இரட்டையர்கள் ஆவர். இதில், சரத்குமார் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. சங்கீதாவுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். அவரது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சங்கீதா தனது கணவர், மகன்களுடன் ஆறுமுகம் வீட்டிலேயே வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை சரத்குமார் தனது வீட்டில் தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சரத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து சரத்குமாரின் தந்தை ஆறுமுகத்திடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், சரத்குமார் வீட்டில் அடிக்கடி தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதன்படி, 8-ந்தேதி இரவும் அவர் வீட்டில் தகராறு செய்தார். இதனால் அவரை வீட்டின் மற்றொரு அறையில் அடைத்து, கதவை பூட்டிவிட்டேன் என்றார்.
பின்னர் போலீசார் அந்த வீட்டை ஆய்வு செய்தபோது, மேற்கூரை ஓடுகள் பிரிந்த நிலையில் இருந்தன. இதனால் தந்தை வீட்டுக்குள் அடைத்ததும் ஆத்திரமடைந்த சரத்குமார், ஓடுகளை பிரித்து வெளியே வர முயன்றிருக்கலாம். அப்போது எதிர்பாராதவிதமாக அவர், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கருதினர்.
இருப்பினும் ஆறுமுகத்தின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அதில், தனது மகனை அடித்தும், கயிற்றால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்ததாக தெரிவித்தார். இதுகுறித்து ஆறுமுகம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
மதுபோதையில் தகராறு
எனது மகன் சரத்குமார் மதுகுடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களிடமும், ஊரில் சிலரிடமும் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதையே வாடிக்கையாக வைத்திருந்தார். இதனால் எனக்கு மிகுந்த மனவருத்தம் இருந்தது. இதற்கிடையே நான் சேர்த்து வைத்திருந்த பணத்தில் எனது மகளுக்கு சமீபத்தில் நிலம் ஒன்றை வாங்கி கொடுத்தேன். இதனை அறிந்த சரத்குமார் அடிக்கடி என்னிடம் தகராறு செய்து வந்தார். மேலும் தனக்கு பணம் கொடுக்குமாறு கேட்டு வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவதும், உடைப்பதுமாக இருந்தார்.
இந்தநிலையில் 8-ந்தேதி இரவு வழக்கம்போல் எனது மகன் மதுபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்தார். அப்போது வீட்டில் இருந்த 2 வயது பேரனின் கழுத்தை பிடித்துக்கொண்டு, என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார். இதனால் பணத்தை எப்படியாவது தந்துவிடுவதாக கூறினேன். பின்னர் எனது பேரனை விட்டுவிட்டார். அதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த அனைவரும் தூங்க சென்றுவிட்டனர். ஆனால் எனக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. மகன் அடிக்கடி தகராறு செய்வதால் ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.
கழுத்தை இறுக்கி கொலை
அதன்படி, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு எழுந்து, சரத்குமார் தூங்கிக்கொண்டிருந்த அறைக்கு சென்றேன். அப்போது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மகனின் தலையில் பலமாக தாக்கினேன். பின்னர் கயிற்றால் சரத்குமாரின் கழுத்தை இறுக்கினேன். இதில், அவர் உயிரிழந்தார். பின்னர் அதிகாலை 5 மணிக்கு மகன் மர்மமான முறையில் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன். மேலும் மகன் வீட்டில் தவறி விழுந்து இறந்ததாக போலீசாரை நம்ப வைப்பதற்காக வீட்டின் மேற்கூரை ஓடுகளை உடைத்தேன். ஆனாலும் போலீசார், எனது மகனை நானே கொலை செய்ததை கண்டுபிடித்துவிட்டனர்.
இவ்வாறு ஆறுமுகம் தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். குடும்ப தகராறில் பெற்ற மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.