மறைமலைநகர் அருகே லாரி மீது கார் மோதி டிரைவர் பலி

மறைமலைநகர் அருகே லாரியின் பின்புறத்தில் கார் ேமாதியதில் டிரைவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-05-29 18:44 GMT

கூடுவாஞ்சேரி,

சென்னை தரமணியை சேர்ந்தவர் அழகு ராணி (வயது 63). இவர் உள்பட 4 பேர் நேற்று காலை சேலத்தில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்துகொண்டிருந்தனர். காரை தென்காசியை சேர்ந்த டிரைவர் ஜெரின் பென்சம்(45) ஓட்டினார்.

மறைமலைநகர் அடுத்த வல்லாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் கார் வரும்போது கேரளாவில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு தாம்பரம் நோக்கி முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் கார் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

டிரைவர் பலி

இடிபாட்டில் சிக்கி படுகாயம் அடைந்த கார் டிரைவர் ஜெரின் பென்சம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த அழகு ராணி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் படுகாயங்களுடன் காரில் சிக்கி தவித்த 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

போக்குவரத்து நெரிசல்

மேலும் விபத்தில் பலியான டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்