சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து
வடபழனியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து.;
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம், சாஸ்திரி நகரை சேர்ந்தவர் மோரிஸ் (வயது 27). இவர், கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர், மயிலாப்பூரை சேர்ந்த போலீஸ்காரர் பாவடியான் என்பவருக்கு சொந்தமான காரை ரூ.3½ லட்சத்துக்கு விலைபேசினார். பின்னர் முன் பணமாக ரூ.50 ஆயிரம் கொடுத்து விட்டு காரை வாங்கினார்.
அதன்பிறகு காரில் உள்ள பழுதை சரிபார்ப்பதற்காக தனது நண்பருடன் நேற்று அதிகாலை வடபழனி, கங்கை அம்மன் கோவில் தெரு வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது. உடனடியாக காரை நிறுத்திவிட்டு இருவரும் கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் காரின் முன்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென கார் முழுவதும் பரவியது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த அசோக் நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. கார் தீப்பிடித்து எரிந்தபோது அருகில் நிறுத்தி இருந்த மற்றொரு காருக்கும் தீ பரவியது. இதில் அந்த கார் லேசாக சேதம் அடைந்தது. காரில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.