வெங்கலம் கிராமத்தில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம்:வீட்டுமனை பட்டா கேட்ட 150 பேருக்கு வழங்க ஏற்பாடுவசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. உறுதி

வெங்கலம் கிராமத்தில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாமில் வீட்டுமனை பட்டா கேட்ட 150 பேருக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளனா்.

Update: 2023-03-14 18:45 GMT


திருக்கோவிலூர், 

தமிழகத்திலேயே முதன் முறையாக மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 10-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முகாமை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அந்தந்த பகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு துறை அதிகாரிகள் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கலம் கிராமத்தில் நேற்று பொதுமக்களை தேடி சென்று மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். அவர், அதிகாரிகளுடன் நேரில் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது உரிய விசாரணைநடத்தி நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்களிடமும் கோரிக்கைளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. உறுதியளித்தார். அப்போது, வெங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் சுமார் 150 பேர், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வை சந்தித்து, தங்களுக்கு இதுநாள் வரை வீட்டுமனை பட்டா கிடைக்கவில்லை, எனவே மனைப்பட்டா பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர்களது கோரிக்கை தொடர்பாக கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை நடத்தினார். அதில், 150 பேருக்கும் வருகிற 18-ந்தேதி வீட்டுமனைப்பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், இதற்கான இடத்தையும் உடனடியாக அந்த பகுதியில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.பார்வையிட்டு, கோட்டாட்சியர் பவித்ராவுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவருடன் ரிஷிவந்தியம் ஒன்றியக்குழுதலைவர் வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெருமாள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்