மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிதனியார் நிதிநிறுவன ஊழியர் சாவு
ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தனியார் நிதிநிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
ராசிபுரம்
தனியார் நிதிநிறுவன ஊழியர்
ராசிபுரம் அருகே ஆயில்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட நாரைக்கிணறு சூரைகுட்டை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் விஜய் (வயது 24). இவர் தம்மம்பட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திவ்யா (21) என்ற மனைவியும், 1½ வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
நேற்று காலை விஜய் வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் தம்மம்பட்டிக்கு சென்றார். நாரைக்கிணறு அருகே உள்ள கல்லுக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஜய் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
டிரைவர் கைது
இதுகுறித்து திவ்யா ஆயில்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், ஆயில்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் மலையாளபட்டியை சேர்ந்த தங்கராசு (47) என்பவரை கைது செய்தனர். விபத்தில் இறந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் விஜயின் உடல் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.