பயணிகளுடன் சென்ற பஸ்சை நடுவழியில்நிறுத்தி ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு
பயணிகளுடன் சென்ற பஸ்சை நடுவழியில் நிறுத்தி ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் இருந்து நெல்லைக்கு குளிர்சாதன வசதி கொண்ட அரசு பஸ் பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரே வந்தது.
இதற்கிடையே விபத்து வழக்கில் ஒன்றில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கோர்ட்டு ஊழியர்கள், பயணிகளுடன் வந்து கொண்டிருந்த அந்த பஸ்சை நடுவழியில் நிறுத்தி ஜப்தி நோட்டீஸ் ஒட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு பஸ்சில் இருந்த பயணிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். பஸ்சை ஜப்தி செய்வதாக இருந்தால் பஸ் நிலையத்திலோ அல்லது பஸ் புறப்படும் இடத்திலோ ஜப்தி செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கையால் பயணிகள் நடுவழியில் இறக்கிவிட நேரிடும் என்றனர். இதனை தொடர்ந்து கோர்ட்டு ஊழியர்கள் பஸ்சில் ஒட்டிய நோட்டீசை அகற்றினர். அதைதொடர்ந்து அந்த பஸ் அங்கிருந்து சென்றது.