விழுப்புரம் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாய்க்கால் பாலம் போக்குவரத்து துண்டிப்பால் கிராம மக்கள் பாதிப்பு

விழுப்புரம் அருகே பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வாய்க்கால் பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் கிராம சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-14 18:45 GMT


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் திறகப்பட்டுள்ள காரணத்தினாலும், தென்பெண்ணை ஆற்றில் கடந்த 2 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தின் வழியாக ஓடும் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், ஆற்றின் கிளை ஆறுகளான பம்பை ஆறு, மலட்டாறு, நரியாறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அடித்து செல்லப்பட்ட பாலம்

அந்த வகையில் பம்பை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதோடு, ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் வாய்க்காலிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், பெரும்பாக்கம்- ஆரியூர் இடையே உள்ள வாய்க்கால் சிறிய பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக பெரும்பாக்கம்- ஆரியூர் இடையேயான கிராம சாலை துண்டிக்கப்பட்டது.

இதனால் ஆரியூர், சாணிமேடு, வெங்கமூர், எடப்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து தடைபட்டது. இதனால் அக்கிராம மக்கள், அத்தியாவசிய தேவைக்காக விழுப்புரம் வர முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் மாற்றுப்பாதையாக சூரப்பட்டு சென்று அங்கிருந்து பூத்தமேடு வழியாக சுற்றிக்கொண்டு விழுப்புரம் சென்று வருகின்றனர்.

மாணவர்கள் பாதிப்பு

மேலும் சாலை துண்டிக்கப்பட்டதன் காரணமாக விழுப்புரத்தில் இருந்து ஆரியூர் வழியாக ஏழுசெம்பொன், சாணிமேடு உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்களின் போக்குவரத்து நேற்று முற்றிலும் நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவர்களும், கூலி வேலைக்கு செல்பவர்களும் மிகவும் அவதியடைந்தனர். அவர்கள் வேறு வழியின்றி ஆபத்தை உணராமல் அங்கு ஓடும் வெள்ளநீரை கடந்து சென்றனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் அப்பகுதியில் தற்காலிகமாக மாற்றுப்பாதை அமைத்துக்கொடுத்து அதன் வழியாக பொதுமக்கள் செல்ல வழிவகை செய்தனர்.

புதிய பாலம்

இதற்கிடையே, தற்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாய்க்கால் பாலம், ஏற்கனவே சேதமடைந்து இருந்ததால் அதற்கு பதிலாக புதிய பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு இருந்தது. கட்டுமான பணிக்கு தேவையான பொருட்களும் அங்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான் தற்போது அந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. எனவே புதிய பாலம் கட்டும் பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்